முனைவர். க.சுபாஷிணி
http://www.vallamai.com/?p=89321
தென்னிந்தியாவில் இருந்து காப்பி, கொக்கோ மற்றும் தேயிலை தோட்டங்களில் பணி புரிவதற்காக வந்த தென்னிந்திய, அதிலும் குறிப்பாகத் தமிழக மக்களின் வாழ்வின் வரலாற்றுச் செய்திகளை ஆவணப்படுத்தி காட்சிப்படுத்தியிருக்கும் அருங்காட்சியகம் இது. இந்த அருங்காட்சியகம் இருப்பது ராமன்துறை தோட்டமாகும். இது நுவரலியாவிலிருந்து நியூ பீக்கோக் எஸ்டேட் செல்லும் பகுதியில் சோகம் தோட்டத்திற்கு அருகாமையில் உள்ளது. இந்த அருங்காட்சியகம் மத்திய மாகாண கண்டி பகுதியில் அமைந்துள்ளது.
அருங்காட்சியகத்தின் வாசலில் சிறிய பூந்தோட்டம் ஒன்றுஅமைக்கப்பட்டுள்ளது. வரவேற்பு பகுதியில் தமிழிலும், சிங்கள மொழியிலும், ஆங்கிலத்திலும் அருங்காட்சியகத்தின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது, உள்ளே நுழையும் பொழுது முதலில் நமக்கு தென்படுவது ஒரு சிறிய குடில். இந்தக் குடில் இன்றைக்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் இருந்து இலங்கையின் மலையக பகுதிக்குத் தோட்டத் தொழிலாளர்களாக வந்த தமிழ் மக்களின் வாழ்விட கட்டுமாணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது.
ஒரு குடில்; அதில் ஒரு அறை மட்டுமே. அறை என்ற பிரிவு இல்லாமல் முழு பகுதியும் வெவ்வேறு மூலைகளில் அதன் பொருட்கள் வைக்கப்பட்டு காட்சி அளிக்கின்றன. சிறிய சமையல் பகுதியில் விறகை வைத்துக் கொள்ளும் பகுதி, பானைகளை அடுக்கி வைக்கும் பகுதி, சமையல் பாத்திரங்களை, அம்மி குழவி போன்றவற்றை வைக்கும் பகுதி, என சிறு பகுதியும், படுத்து உறங்கும் பகுதியாக ஒரு பகுதியும் காட்சியளிக்கின்றன. மற்றொரு பகுதியில் துணிகளை உலர்த்தும் மூலை தென்படுகின்றது. சுவற்றில் இந்திய சுதந்திரப் போராட்டத்தலைவர்கள் புகைப்படங்கள் உள்ளன. பண்டித ஜவகர்லால் நேரு, மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ் போன்றோரின் புகைப்படங்கள் சுவற்றில் தென்படுகின்றன. இவை இம்மக்கள் இந்தியாவின் சமகால நிலையை இலங்கையிலும் பிரதிபலித்தமையை வெளிப்படுத்துவதாக அமைகிறது. இந்த குடிசைவீட்டின் உள்ளே அருங்காட்சியக நிர்வாகம் காட்சிப்படுத்தியிருக்கும் பொருள்கள் 1820-களில் தமிழ் மக்கள் பயன்படுத்திய சமையலறைப் பொருட்கள் ஆகும்.
காப்பித் தோட்டத்தில் பணிபுரிய 1820 வாக்கில் தொடங்கி தமிழகத்திலிருந்து இலங்கையின் மலையக பகுதிக்கு வந்தவர்கள் தற்காலிகமாக தங்கி கொள்வதற்காக கூரைவேய்ந்த இத்தகைய குடிசைகளை அமைத்து அவற்றில் தங்கியிருந்தனர். ஆறு மாதங்கள் காபித் தோட்டங்களில் அவர்கள் பணிபுரிவார்கள். பின்னர் காபி செடிகள் வளரும் பருவத்தில் அவர்கள் தங்களுக்குக் கிடைத்த கூலியைப் பெற்றுக்கொண்டு இந்தியாவிற்கு அதாவது தமிழகத்திற்கு திரும்பிவிடுவார்கள். இக்காலகட்டத்தில் தமிழகத்திலிருந்து மலையகப்பகுதிக்கு வந்தவர்களில் ஆண்களே அதிகமாக இருந்தனர்.தோட்டத்தில் 1880 வாக்கில் காப்பி பயிர்களுக்கு ஏற்பட்ட நோயின் காரணமாக காப்பி விளைச்சல் நிறுத்தப்படவே தேயிலைத் தோட்டங்கள் உருவாகத் தொடங்கின. தேயிலைத் தோட்டப்பணி வருடம் முழுவதும் வேலை பார்க்கக் கூடிய ஒரு தொழில் ஆகையால் 1860 தொடங்கி அடுத்தடுத்த காலகட்டங்களில் இருந்து தமிழகத்திலிருந்து இலங்கையின் மலையக பகுதிக்கு ஆண்களும் பெண்களுமாக குடும்பம் குடும்பமாக பயணித்து வந்து தோட்டங்களில் தொழிலாளர்களாக தம்மை ஈடுபடுத்திக் கொண்டனர்.
மலையகப் பகுதியில் காபி தோட்டங்களில் கொக்கோ மற்றும் தேயிலை தோட்டங்களில் பணிபுரிய வந்த மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார்கள். முறையான சம்பளம் அவர்களுக்கு வழங்கப்படவில்லை இரண்டு ரூபாய் சம்பளம் கிடைக்கும் என்று சொல்லி ஏமாற்றி அழைத்து வந்து ஆனால் ஒரு ரூபாய் சம்பளம் கிடைப்பது கூட சிரமமாக அமைந்த நிகழ்வுகளும் உண்டு தினக்கூலி என்பது இல்லாமல் வருடத்திற்கு மூன்று முறை மாத்திரம் சம்பளம் என்ற வகையிலும் சிலவேளைகளில் சம்பளம் கிடைக்காத சூழலும் கூட ஏற்பட்டு மலையக மக்கள் மிகுந்த துன்பத்திற்கு ஆளானார்கள் ஆரம்ப காலகட்டங்களில் ஆங்கிலேயர்கள் மலையகத்தில் பணிபுரிய வந்த தமிழ் பெண்களை பாலியல் வன்கொடுமைகள் செய்தமையும் குறிப்பிடத்தக்க செய்திகளாகும் அதன் பின்னர் படிப்படியாக ஆங்கிலேயர்கள் குடும்பம் குடும்பமாக வந்து தங்கிய பின்னர் இந்த பிரச்சினைகள் குறைந்தாலும் தமிழ் மலையக கங்காணிகள் தமிழ் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வது பெருவாரியாகத் ஆகவே தொடர்ந்தது.
இலங்கையின் தோட்டங்களில் பணி புரிவதற்காக கி.பி.1800களின் ஆரம்பங்களில் இருந்து தமிழக மக்கள் தூத்துக்குடியிலிருந்து கடற்கரை பகுதிக்கு வந்து அங்கிருந்து கொழும்புவிற்கும் தமிழகத்தின் வடக்கு பகுதியின் பல்வேறு நகர்களில் இருந்து ராமேஸ்வரம் வந்து பின்னர் அங்கிருந்து தனுஷ்கோடி வந்து பின்னர் அங்கிருந்து மன்னார் தலைமன்னார் போன்ற பகுதிகளுக்கு வந்து கால்நடையாகவே ஏறக்குறைய 140 மைல் தூரம் நடந்து பயணித்து இலங்கையின் மத்திய பகுதியான மலையகப் பகுதிகளுக்கு வந்து சேர்ந்தனர். தோட்டங்களில் பணிபுரிய வருகின்றோம் என்று ஆவலுடன் வந்த மக்கள் இங்கு முதலில் காடுகளையே காணக் கூடிய நிலை இருந்தது. மிக அடர்ந்த காடுகள் அவை. அந்தக் காடுகளில் பயணிக்கும் போது பல்வேறு விலங்குகளாலும் பூச்சிகளினாலும் பாம்பு போன்ற விஷப்பூச்சிகளினாலும் தாக்கப்பட்டு உயிர் இழந்தோர் மிகப் பலர். பயணிக்கும் போதே கொசுக்கடி ஏற்பட்டு தொடர்ந்து பெய்து வரும் அடை மழையில் நனைந்து மலேரியா நோய்வாய்ப்பட்டு இறந்தவர்களும் அதிகம். இப்படி பல துன்பங்களைக் கடந்து வந்த மக்கள் கடுமையான உழைப்பைச் செலுத்தி காடுகளை தூய்மைப்படுத்தி காப்பி தோட்டங்களையும் கொக்கோ பயிர்களையும் தேயிலை தோட்டங்களையும் உருவாக்கினார்கள்.
மலையக மக்கள் எதிர்நோக்கிய பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்வதற்குத் தொழிற்சங்கங்கள் ஆற்றிய பணி மிக முக்கியமானது. மலையக சமூக நல ஆர்வலர்கள் உழைப்பால் சில தொழிற்சங்கங்கள் தொடங்கப்பட்டன. மலையகத்தில் மாத்தளை, ஹட்டன், நுவரெலியா, கண்டி, பேராதனை போன்ற பகுதிகளிலும் மற்றும் ஏனைய மலையக பகுதிகளிலும் தொழிற்சங்கங்களின் சமூக நலன் நடவடிக்கைகள் தொடங்கின. அதில் குறிப்பிடத்தக்கவர்களாக பத்திரிகையாளரும் தொழிற்சங்கவாதியுமாகிய கோ.நடேசய்யர் மற்றும் அவரது துணைவியார் மீனாட்சியம்மா போன்றோரைக் குறிப்பிடலாம். ஆங்கிலேயர்கள் அறிய விரும்பாத பல பிரச்சினைகளை மக்கள் மத்தியில் நேரில் சென்று அப்பிரச்சினைகளைக் கேட்டு அவற்றிற்கு வேண்டிய உதவிகளைச் செய்யும் வகையில் தொழிற்சங்க நடவடிக்கைகளை இத்தகையோர் செயல்படுத்தினர். பத்திரிகைகள் வாயிலாகவும், பிரச்சாரங்கள் வழியாகவும் மக்களுக்குத் தங்கள் உரிமைகளை அவர்கள் பெற உதவும் வகையிலான நடவடிக்கைகளை தொழிற்சங்க தலைவர்கள் அக்காலகட்டத்தில் செயல்படுத்தினர். பிரச்சாரங்கள் மட்டுமன்றி பாடல்கள், நாடகங்கள், கூத்துகள் வழியாகவும் எளிய மலையக தமிழ் மக்களுக்குத் தங்கள் உரிமைகளை அவர்கள் உணர்ந்துகொள்ள தொழிற்சங்க தலைவர்களும் செயல்பாட்டாளர்களும் முன்னெடுத்தனர். அத்தகைய தொழிற்சங்க தலைவர்களின் புகைப்படங்களும் குறிப்பிடத்தக்க ஆவணங்களும் இந்த அருங்காட்சியத்தில் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
1948ஆம் ஆண்டு இலங்கைக்குச் சுதந்திரம் கிட்டியது. சுதந்திரத்திற்குப் பிறகு இலங்கையில் சிங்கள மக்களில் குறிப்பிடத்தக்க சில தலைவர்களின் தொடர் முன்னெடுப்புக்களினால் இலங்கைக்குப் பணியாற்ற வந்த தமிழக மக்கள் இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்ட சட்ட வரையறைகளின்படி, மலையக பெருந்தோட்ட மக்கள் குறிப்பிடத்தக்க பெரிய எண்ணிக்கையில் நாடற்றவர்களாக ஆகும் நிலை உருவானது. அதன்பின்னர் தொடர்ச்சியான பல முயற்சிகள், அதிகாரப்பூர்வ சந்திப்புகள் என்பன இந்தியாவிற்கும் இலங்கைக்கும் நிகழ்ந்தாலும், மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் தமிழ் மக்களுக்கு சரியான, முறையான குடியுரிமை மற்றும் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டே வந்தது. 1964ஆம் ஆண்டு சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின்படி ஏறக்குறைய ஐந்தரை லட்சம் தமிழ் மக்கள் இந்தியாவிற்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்றும், ஏறக்குறைய மூன்றரை இலட்சம் தமிழ் மக்கள் இலங்கை குடியுரிமை பெறுவார்கள் என்றும், ஏறக்குறைய ஒன்றரை இலட்சம் தமிழ் மக்கள் நாடற்றவர்கள் என்றும் வகைப் படுத்தப் பட்டார்கள். இப்படி வகைப்படுத்தப்பட்ட பின்னரும்கூட அனைத்து மக்களுமே பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கினர்.
இலங்கையில் வாழ்ந்த தமிழ் பெருந்தோட்ட தொழிலாளர்கள் 2003ஆம் ஆண்டு வரை தங்கள் குடியுரிமை பிரச்சினைகளில் பல்வேறு வகையான சிரமங்களை எதிர்கொண்டனர். இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பப்பட்ட தமிழ் மக்களும் தமிழகத்திற்குத் திரும்பியபின் தாங்கள் விட்டுச் சென்ற காணிகளை இழந்து, சொத்துக்களை இழந்து, பொருளாதார பிரச்சினைகளைப் பெருவாரியாகச் சந்தித்து தங்கள் புதிய வாழ்க்கையைத் தொடங்கவேண்டிய நிலைக்கு ஆளானார்கள்.. இவ்வரலாற்றுச் செய்திகளை வெளிப்படுத்தும் பல்வேறு கையெழுத்து ஆவணங்கள் இந்த மலையக தோட்டத் தொழிலாளர் அருங்காட்சியகத்தில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.
இலங்கைக்கு கடந்த 200 ஆண்டுகளாக மிகுந்த பொருள் வளத்தை தரும் ஒரு துறையாக இருப்பது தேயிலைத் தோட்டங்கள். இலங்கைக்கு பெரும் வளத்தை உருவாக்கித் தந்ததோடு, உலக அளவில் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. எல்லா உயர்தர தங்கும் விடுதிகளிலும் மேற்கத்திய நாடுகளிலும் மிக முக்கிய பானமாக கருதி பயன்பாட்டில் இருக்கின்றது இலங்கையில் உற்பத்தியாகும் தேயிலை. இலங்கையின் மலையகப் பகுதிக்கு இன்று நாம் செல்லும்போது நாம் காணும் காட்சி இயற்கை அழகின் எல்லை இல்லா பேரழகு. இது சுவர்க்கலோகம் என்று இங்கு வருகின்ற ஒவ்வொருவரும் எண்ணும் வகையில் மலையகத்தில் அமைந்துள்ள தேயிலைத் தோட்டங்கள் காட்சியளிக்கின்றன. இதனை உருவாக்கிய மலையக தமிழ் மக்களின் வாழ்க்கை நிலையோ இன்றளவும் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கும் வகையிலேயே தொடர்கின்றது.
முறையான சுகாதார நலன் இன்றி இம்மக்களின் அன்றாட வாழ்க்கைத் தொடர்கின்றது. கல்வி மேம்பாடு தொடர்பான விஷயங்களிலும் இம்மக்களுக்கு மேம்பாடு தேவைப்படுகின்றது. குடியிருக்க சொந்த வீடுகள் இன்றியும், தேயிலைத் தோட்டங்களிலேயே அவர்களது பிறப்பு முதல் இறப்பு வரை நிரந்தரமற்ற ஒரு வாழ்க்கையாகவே முடிந்து விடும் அவலமும் தொடர்கிறது. இத்தகைய செய்திகள் அனைத்தையும் ஆவணப்படுத்தும் முயற்சியின்வெளிப்பாடாக நியூ பீக்கோக் எஸ்டேட் அருகாமையிலிருக்கும் ராமன்துறை தோட்ட ”மலையக மக்கள் அருங்காட்சியகம்” இன்று நமக்குக் காட்சி அளிக்கின்றது. இந்த அருங்காட்சியகத்தில் பணிபுரிகின்ற அருங்காட்சியக அதிகாரி திரு.சந்தனம் சத்தியநாதன் மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளை உலகத் தமிழ் மக்களின் சார்பில் நன்றியினையும் பாராட்டுக்களையும் பதிகின்றோம்.
1 comment
அருமை