– நாள் 2 –
இரண்டாம் நாள் அதிகாலையிலேயே நெடுந்தீவு நோக்கிய பயணத்துக்குத் தயாராகிவிட்டோம்.
நெடுந்தீவு:
யாழ்ப்பாண குடாநாட்டின் தென்மேற்கே அமைந்துள்ள ஏழு தீவுகளுள் ஒன்று நெடுந்தீவு. இது ஆனையிறவு (Elephant Pass) அருகே குறுநிலப்பகுதி வழியாக வன்னி நிலத்தோடு இணைகிறது. நெடுந்தீவு பயணத்துக்காக யாழ் பேருந்து நிலையத்துக்குப் பால் அப்பங்களோடு நாங்கள் சென்ற போது எங்களுக்காகப் பேராசிரியர் புஸ்பரட்ணம் அவர்களும், திருமிகு. உமா சந்திரபிரகாஷ் அவர்களும் காத்திருந்தனர்.
பணிக்குச்செல்லும் இளம்பெண்கள் பவுடர் பூச்சுகளோடு ஏறி நிரம்பிய அரசுப் பேருந்தில் நாங்களும் ஏறிக் கொண்டோம். அந்த காலத்தைய பல்லவன் டிரான்ஸ்போர்ட்டை நினைவு படுத்தியது அந்தப்பயணம். இளங்காலை வேகக் காற்று முகத்தில் அறைய, ஒல்லாந்தர் கோட்டையைப் பேருந்திலிருந்து பார்த்தபடி மண்டைத்தீவு, வேலணை வழியாக புங்குடுத்தீவு சென்றடைந்தோம்.
மக்கள் போக்குவரத்து அதிகமற்ற சாலை வழியெங்கும் போரினால் கைவிடப்பட்ட இல்லங்கள், வாழ்வின் இழப்பைச் சொல்லிக் காட்டுவது போலச் சிதைந்து கிடந்தமை எமக்குள் வலியைப்பாய்ச்சின. அதே சமயம் வழிநெடுக கண்ணில் பட்ட பல பெயர்ப்பலகைகளில் தெரிந்த வாசிப்பு நிலையங்கள் மனதுக்கு இதம் தந்தன. புங்குடுத்தீவில் நாங்கள் இறங்கிய சமயம் மிகச்சரியாக நெடுந்தீவு செல்லும் படகு புறப்படத்தயாராக நின்றது.
குமுதினி:
நாங்கள் ஏறிய படகு குமுதினி என்ற பெயர் கொண்டது. இந்தப்படகின் பின்னணியில் ஆழமான சோகக்கதையொன்று உள்ளதென்று உமா துவங்கினார். 1985இல் சிங்கள வீரர்கள் கையால் கைக்குழந்தை, பெண்கள் உட்பட 36 தமிழர்கள் இதே படகில் உயிரிழந்த துயரத்தை அவர் விவரிக்க, யாம் பேச்சற்றுப் போனோம். உயிர் அத்தனை இலகுவாகப் போய்விட்டதென்றால் மானுடம் எதை நோக்கித்தான் பயணிக்கிறதென்ற கேள்வி மனதைக்குடைய, கடலை வெறிக்கத்துவங்கினேன். அன்றைய இழப்பை இன்றும் மனதில் தாங்கிக்கொண்டு வாழும் அந்நிலத்து மக்களையும், யாவற்றையும் வாங்கித் தம் அடிமடியில் கிடத்திக்கொள்ளும் அந்தக்கடலும் போலவே குமுதினியும் இன்று வரை மவுனமாகக் கடலைக்கடந்து வருகிறாள்.
நெடுந்தீவில் விருந்தினர் இல்லத்தில் எங்களுக்கு வேகவைத்த வள்ளிக்கிழங்கும் தேங்காய் சம்பலும் பரிமாறினர். பதின்ம வயதுகளில் ஊர்க்கோவில் கொடையின்போது ஆலிலையில் இப்படிச் சுட்டும் இட்டும் தின்ற நினைவு.
பின்னர் தமிழ் மரபு அறக்கட்டளை சார்பாக வரலாற்று ரீதியில் பேரா. புஸ்பரட்ணம் அவர்களிடமும், யுத்த காலமும் அதற்குப்பின்னரும் மக்களின் அன்றாட வாழ்வியல் சிக்கல்கள் மற்றும் பெண்களின் நிலைப்பாடு போன்ற கருத்தியல்களை முன்வைத்து திருமிகு உமாசந்திரபிரகாஷ் அவர்களிடமும் நேர்காணலாக ஆவணப்படங்கள் எடுக்கப்பட்டன.
அதன்பின் எங்களது ஆய்வுப்பயணம் தொடங்கியது. முதலில் டச்சுக்கார்கள் காலத்தில் கட்டப்பட்டதான வைத்தியசாலையும் அதில் அமைந்திருந்த புறா மாடத்தையும் பார்வையிட்டோம். மேற்கத்தியர் காலத்தில் தூது செல்ல புறாக்கள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டமையால் அவற்றிற்காக இவ்வாறான புறா மாடங்கள் அமைப்பதும் அவர்களுக்கு இயல்பானதாக இருந்திருக்கிறது.
இத்தகைய புறாத்தூது 1988 வரை வழக்கத்திலிருந்திருக்கிறது. மேற்திக்கில் எகிப்தியர் காலந்தொட்டு பயன்பாட்டில் இருக்கும் நூதனமான இத்தகைய பறவை மாடங்களை அமைக்கும் வழக்கம் கீழ்த்திசைக்கடல் தேசங்களிலோ, அல்லது செங்கால் நாரையைத் தூதுவிட்ட நம் தமிழ்ப் பண்பாட்டிலோ இருக்கவில்லை என்பதை வியப்போடு நினைந்தேன்.
மதிய உணவுக்காக நெடுந்தீவுவாசியான திரு. கணபதி அவர்கள் இல்லம் சென்றோம். பனைமரக் காடுகளுக்கு மத்தியில் குடிலமைத்து தம் மனைவி மக்களோடு வாழ்ந்து வரும் ஓய்வு பெற்ற தபாலதிகாரியான இவர் எங்களுக்காக ’ஒடியல்’ கடல் கூழ் தயார் செய்து கொண்டு இருந்தார்.
காயவைத்த பனங்கிழங்கை உடைத்து ஒடியல் மாவு செய்யப்படுகிறது, இதைச் சேர்த்தால் தான் இந்தக்கூழுக்கு அந்த தனித்த சுவை கிட்டும் என்கிறார்கள். பனையோலைப் பிளாவில் அதை ஊற்றி, பனங்கிழங்கு உருளைகளோடு உண்ணக்கொடுத்தார்கள். நான் மீன் எடுப்பதில்லை என்று எனக்குச் சோறும், பருப்பும், கொத்தவரங்காய் பிரட்டலும் கிடைத்தது.
உண்டு களித்து உறவாடியபின் மீண்டும் தொடர்ந்தோம் பயணத்தை. அங்கிருந்து தொல்லியல் சிறப்பு வாய்ந்த இடம் ஒன்றிற்கு எங்களை அழைத்துச்சென்றார் பேராசிரியர் புஸ்பரட்ணம் அவர்கள்.
வெடியரசன் கோட்டை/புத்த கட்டுமானம்:
வட்டவடிவில் பீடத்தோடு பெரிய தூபியின் அடித்தளம் போன்ற நிலையிலிருந்த அது ஒரு பவுத்த கட்டுமானம். அங்கிருந்த மூன்று தூபிகளில் பெரியதது.
அதன் அடித்தள நடைபாதையில் சில கல்வெட்டுகளையும் கண்டோம். அவற்றில் இரண்டு 14-15 நூற்றாண்டுத் தமிழிலும் ஒன்று 1-2ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த பிராமியிலும் இருந்தன. பேராசிரியர் இவை தூபிகளல்ல பவுத்த தேராக்களின் நினைவிடங்களாக இருக்கலாம் என்ற தனது கருத்தை முன்வைத்தார்.
இவ்விடம் ஒரு சாராரால் 2ஆம் நூற்றாண்டைச்சார்ந்த தமிழ் மன்னனான விஷ்ணுபுத்திர வெடியரசன் என்பவனது கோட்டை என்றும் நம்பப்படுகிறது. இவனது பெயரில் நயினாத்தீவில் வீதி ஒன்று இருப்பதாயும் சொல்கிறார்கள். எனினும் இதற்கான உறுதியான வரலாற்றுச்சான்று ஏதுமில்லை.
மேற்குப்பகுதியில் சோழர்காலத்து இடிபாடொன்று இருப்பதாகவும், இன்னும் ஏராளமான தொல்லியல் தளங்கள் இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் நிலப்பகுதியில் இருப்பதால் அவற்றை நம்மால் பார்வையிட முடியாத நிலை என்றும் பேராசிரியர் தெரிவித்தார்.
ஒல்லாந்தர் கோட்டை:
போர்த்துக்கீசியர், டச்சு ஆதிக்கத்திலிருந்த நெடுந்தீவு அதன் எச்சங்களாக இன்று நிற்கும் கட்டுமானங்களுள் ஒன்று தான் கடலைப் பார்த்தபடி இருக்கும் ஒல்லாந்தர்/டச்சுக்கோட்டை.
இது ஒல்லாந்தர் கோட்டை என்றே பரவலாக நம்பப்படுகிறது. எனினும் ஒல்லாந்தர் ஆவணங்களில் இத்தகைய கோட்டை இருந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் அதே சமயம் போர்த்துக்கீசியர் பற்றிய குறிப்புகளில் நெடுந்தீவில் அவர்களது தலைமையகமாக விளங்கிய ஈரடுக்குக் கோட்டை பற்றிய குறிப்புத் தென்படுவதால் இது போர்த்துக்கீசியர் கட்டி பிற்காலத்தில் ஒல்லாந்தர் பயன்பாட்டிலிருந்திருக்கலாம் என்றும் பேராசிரியர் கருத்துரைத்தார்.
ஒல்லாந்தர் காலத்தில் அரேபியத் தேசத்திலிருந்து தனித்துவமான குதிரைகளை இறக்குமதி செய்து வளர்த்தனர். அவற்றின் பராமரிப்புக்காகக் கட்டப்பட்ட விசாலமான குதிரை லாயமும் காணக்கிடைத்தது. மதுரையின் யானைக்கட்டித்தூண் ஏனோ என் நினைவுக்கு வந்தது.
இன்றளவும் அந்தக்குதிரைகளின் வழிவந்த அழகுப்பரிகள் அங்கே திரிவதைக் காணமுடிகிறது.
ஒல்லாந்தரின் வருகையோடு வந்தது குதிரை மட்டுமல்ல மற்றொரு வியத்தகு அம்சமான பெருக்கு மரம். இதுவும் இங்கே தொல்லியல் சின்னமாகப் பாதுகாக்கப்படுகிறது.
அந்தி மயங்கிய நேரத்தில் வரியோடிய நீலத்திரைகடல் தன்னுள் ஒளித்து வைத்திருக்கும் ஆயிரமாயிரம் வெற்றியின் நினைவுகளையும், தோல்வியின் ரணங்களையும், உலகறியா இரகசியங்களையும் நினைத்து பெருமூச்செறிந்தபடி விசைப்படகில் புங்குடுத்தீவு நோக்கித் திரும்பினோம். அங்கே பேருந்து சேவை முடிந்திருந்த நிலையில் தனியார் வாகனம் ஒன்றை இருத்தி யாழ்ப்பாணம் வந்தடைந்தோம்.
மறுநாள் செல்லவிருந்த யாழ் நூலகத்தை மனதில் இருத்தியபடி உறங்கிப்போனோம்.