Home article இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு – ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு

இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு – ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு

by Dr.K.Subashini
0 comment

*முனைவர்.க.சுபாஷிணி*

தொல்லியல் அகழ்வாய்வுகள் வெளிப்படுத்துகின்ற சான்றுகள் ஒரு இனத்தின் வரலாற்றினை அறிந்து கொள்வதற்கு அடித்தளம் அமைக்கும் முக்கியக் கருவிகளாகும். தமிழ் இனத்தின் பண்டைய நாகரிகத்தையும், வரலாற்றையும், பண்பாட்டுக் கூறுகளையும் துல்லியமாகக் கண்டறிய தொடர்ச்சியான அகழ்வாய்வுகள் அவசியமாகின்றன. தமிழ் மக்கள் இன்று அதிகம் நிலைபெற்றிருக்கும் பகுதிகள் மட்டுமன்றி, இந்த இனம் பரவலாகச் சென்றிருக்கக் கூடிய பல்வேறு பகுதிகளிலும் அகழ்வாய்வுகள் நிகழ்த்தப்படும் சூழலில் தமிழ் மக்களின் வரலாறு மேலும் தெளிவு பெறும். இதன் அடிப்படையில் காணும் போது தமிழ் இனத்தின் முக்கிய வாழ்விட நிலப்பகுதியாக உள்ள தமிழகம் மட்டுமன்றி அதன் தீபகற்ப இந்தியாவின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள இலங்கையிலும் அதிக அளவில் தொல்லியல் அகழ்வாய்வுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

 

அந்த ரீதியில் அண்மையில் இலங்கையின் மன்னார் மாவட்டத்திற்குட்பட்ட கட்டுக்கரை பகுதியில் யாழ் பல்கலைக்கழத்தின் தொல்லியல் மற்றும் வரலாற்றுத் துறைகளின் தலைவர் டாக்டர்.புஷ்பரட்ணம் அவர்கள் தலைமையில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வு முக்கியத்துவம் பெறுகின்றது. இந்த அகழ்வாய்வு பற்றிய செய்தியைச் சிக்காகோ நகரில் நடைபெற்ற பத்தாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு ஆய்வரங்கில் ஈழத்தில் இருந்து கலந்து கொண்ட பேராசிரியர் புஷ்பரட்ணம் ஆய்வுக்கட்டுரையாக சமர்ப்பித்தார்.

 

இந்த அகழ்வாய்வு வட இலங்கையில் கட்டுக்கரை என்ற இடத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வரங்கின் தொகுப்பில் வடஇலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய புராதன குடியிருப்பு மையம் கட்டுக்கட்டுரையில் கண்டுபிடிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், இலங்கைத் தழிழரின் பூர்வீக வரலாறு விஜயன் வருகைக்கு முன்னர் (2500ஆண்டுகளுக்கு முன்னர்) நிலவிய பண்பாடுகளில் இருந்து தொடங்குவதை இலங்கையில் தமிழ்மக்களின் மிக நீண்ட தொடர்பினை இது உறுதி செய்வதாக அமைந்தது என்பதோடு சிங்கள மொழி உருவாக்கம் பெற்றதாகக் கருதப்படும் காலகட்டமான கிபி 6 அல்லது 7க்கு முன்னரே தமிழர்கள் வாழ்ந்த நிலப்பகுதிதான் இன்றைய இலங்கை என்பதை உறுதி செய்வதாகவும் அமைகின்ற ஒரு மிக முக்கியச் சான்று காட்டும் ஆய்வாகவும் இது அமைந்துள்ளதை விளக்கினார்.

 

இலங்கையில் பெருங்கற்காலப் பண்பாட்டை அறிமுகப்படுத்தியவர்கள் நாகர் இனக்குழுவினர். இதற்கு அடிப்படையை வகுக்கும் சான்றாக பெருங்கற்கால மக்கள் தங்கள் இறை வழிபாட்டில் நாகத்தை குலமரபுத் தெய்வமாகக் கொண்டிருந்ததே காரணம் என்பதற்கு கட்டுக்கரை அகழ்வாய்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட பல நாகர் சிலைகள், சிற்பங்கள் ஆகியவை சான்றுகளாக அமைகின்றன. இந்த ஆதாரங்களைத் தமது கட்டுரை சமர்ப்பித்தலின் போது ஆதாரமாக்காட்டியமை அமர்வில் கலந்து கொண்ட ஆய்வாளர்களுக்குப் புதிய செய்தியாக அமைந்தது.

 

அதுமட்டுமன்றி, நாகர் இன மக்கள் தமிழ் மொழி பேசிய மக்கள் தான் என்பதற்குச் சான்றாக அப்பண்பாட்டு மக்கள் பயன்படுத்திய மட்பாண்டங்களில் பொறிக்கப்பட்ட தமிழி (தமிழ் பிராமி) எழுத்துக்களையும், தமிழ்ப் பெயர்களையும் ஆதாரமாகக் காட்டியமை ஆய்வாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதன் வழி, வடஇந்தியாவில் இன்றைக்கு ஏறக்குறைய 2300 ஆண்டளவில் பிராமி எழுத்து தோன்றுவதற்கு 300 ஆண்டுகளுக்கு முன்னரே ( 2600 ஆண்டளவில் ) தமிழக நிலப்பரப்பில் தமிழி எழுத்து தோன்றி வழக்கில் இருந்தது என்பதோடு தமிழகத்திலும் இலங்கையிலும் புழக்கத்தில் இருந்தது என்பதையும் உறுதிபடுத்துவதாக அமைகிறது.

 

அந்த வகையில் தமிழி (தமிழ் பிராமி) எழுத்துக்கள் ஈழம் மற்றும் தமிழகத்தில் இருந்தே வடஇந்தியாவிற்குச் சென்றிருக்கலாம் என்றும், வடஇந்திய பயன்பாட்டில் பிராமி எழுத்து அறிமுகமாகியது எனவும் தனது ஆய்வுரையில் பேராசிரியர் புஷ்பரட்ணம் வலியுறுத்தினார். தமிழ் எழுத்துருக்களின் தொன்மை பற்றிய ஆய்வுகளில் ஒரு மைல்கல்லாக இந்த அகழ்வாய்வு அமைந்திருப்பதைப் பேராசிரியர் புஷ்பரட்ணம் அவர்களது ஆய்வும் மாநாட்டுக் கட்டுரையும் நிரூபித்தன.

 

பேராசிரியர் புஷ்பரட்ணம் அவர்களது இக்கருத்தை ஏற்றுக் கொண்ட ஆய்வரங்கின் தலைவராக செயல்பட்ட இந்தியாவின் முதன்மைத் தொல்லியலாளர்களில் ஒருவரான பேராசிரியர் க. இராஜன் அவர்கள், சமகாலத்தில் தமிழகத்திலும் இலங்கையிலும் தமிழ் மொழி, தமிழ் எழுத்தின் தொன்மையை அறிய மேற்கொள்ளப்பட்டு வரும் தொல்லியல் கண்டுபிடிப்புக்களாவன, ஈழத்தை தவிர்த்து விட்டு ஆராய முடியாது என்பதற்கு கட்டுக்கரை அகழ்வாய்வுகள் சிறந்த உதாரணம் எனக் குறிப்பிட்டார். மேலும், பண்டைய தமிழக -இலங்கைப் பண்பாடு ஒரு ஒட்டுமொத்த பிராந்தியத்திற்குரிய பண்பாடாகவே பார்க்கப்பட வேண்டும் எனவும், அதற்குக் கட்டுக்கரை அகழ்வாய்வு சிறந்த சான்று எனவும் குறிப்பிட்டார்.

 

ஓராண்டு காலம் நடைபெற்ற இந்த மன்னார் மாவட்ட கட்டுக்கரை அகழ்வாய்வின் மூலம் ஈழத்தமிழர் வரலாற்றின் பல முடிச்சுக்களைக் கட்டுக்கரை அகழ்வாய்வுகள் கட்டவிழ்த்து விட்டிருப்பதாகவும் பாராட்டிப் பேசினார். பேராசிரியர் இராஜன் அவர்களது முனைவர் பட்ட ஆய்வு மாணவர் பேராசிரியர் புஷ்பரட்ணம் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

 

இந்த ஆய்வரங்கில் கலந்து கொண்ட பல அறிஞர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பேராசிரியர் இராஜன் மற்றும் பேராசிரியர் புஷ்பரட்ணம் ஆகிய இருவரும் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் விளக்கமான பதில்களாகத் தெளிவைத்தரும் வகையில் அமைந்தன. கடந்த 10ம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளில் தமிழ் வரலாறு மற்றும் பண்பாடு தொடர்பான ஆய்வுத் தளங்களில் முக்கியத்துவம் பெறுகின்ற கட்டுரைகளில் இதுவும் ஒன்று.

 

 

 

 

 

You may also like

Leave a Comment