305
தமிழகத்தின் திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளிலிருந்து இலங்கைக்குக் கோப்பித்தோட்டங்களில் பணிபுரிவதற்காகவும் தேயிலைத் தோட்டங்களில் பணி புரிவதற்காகவும் கி.பி.19ம் நூற்றாண்டில் தமிழகத்திலிருந்து மக்கள் இலங்கை வந்தனர். இவர்கள் படகுகள், கட்டுமரங்கள், தோணிகள் மூலமாகவும் பிரித்தானிய காலணித்துவ அரசால் கப்பல் வழியாகவும் அழைத்து செல்லப்பட்டனர். பன்றிப்படகுகள் என்றறியப்பட்ட ஒருவகை படகில் அவர்கள் வந்ததாகவும் அதனைச் செலுத்தியவர்கள் முகம்மதியர்களாக இருந்தனர் என்றும் ‘ மலையகத் தமிழர்கள் வரலாறு’ எனும் நூல் குறிப்பிடுகின்றது. கப்பலில் வந்தவர்கள் பற்றி குறிப்பிடும் இதே நூல் சிலோன் புளூ புக் – 1864 என்ற ஆவணம், ஆண்டொன்றிற்கு இலங்கைக்கரையை வந்தடைந்த கப்பல்கள் என பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து 2079 கலங்கல் என்றும், பிரஞ்சு இந்தியாவிலிருந்து 175 கலங்கள் என்றும் குறிப்பிடுகின்றது.
1808ம் ஆண்டு தமிழகத்தில் ஏற்பட்ட பஞ்சம், பின்னர் 1865-1880 காலகட்டத்தில் ஏற்பட்ட கோரப்பஞ்சம் ஆகியவை தமிழக மக்கள் புலம்பெயர்வதற்கு முக்கிய காரணமாகின. 1866ம் ஆண்டு ஏற்பட்ட பஞ்சத்தில் தமிழ்நாட்டில் மட்டுமே இரண்டு லட்சம் பேர் மாண்டனர் என்று ‘தமிழர்களின் சமுதாய வரலாறு ‘ என்ற நூலில் பி.சுப்பிரமணியன் குறிப்பிடுகின்றார். பஞ்சத்தில் வாடிய மக்கள் புதிய நிலப்பகுதியில் தங்கள் வாழ்க்கையைத் தொடர புதிய வழி ஏற்பட்ட மகிழ்ச்சியில் இலங்கைக்குப் பயணமாயினர். முதலில் கோப்பித்தோட்டத்தில் உழைக்கவே அவர்கள் அழைத்து செல்லப்பட்டனர். ராமேஸ்வரத்திலிருந்து கடல்பயணம் மேற்கொண்டு இலங்கையின் மன்னார் பகுதிக்கு வந்து இவர்கள் பயணம் மலையகம் நோக்கி அமைந்தது. அக்காலச் சூழலில் நல்ல சாலைகள் ஏதும் இல்லை. கடும் உழைப்பைச் செலுத்தி காடுகளை அழித்து சாலைகளை அமைத்தனர். இப்படி கடுமையான உழைப்போடு மலையகப் பகுதிக்கு இவர்கள் கொண்டு செல்லப்பட்டனர்.
இலங்கையின் மலையகத்தில் அடர்ந்த காடுகளை அழிக்கும் பணியின் போது மலேரியா நோய் இவர்களுக்குப் பெறும் அச்சுறுத்தலாக அமைந்தது.
‘ மலையகத் தமிழர்கள் வரலாறு ‘ எனும் நூல், 1852ம் ஆண்டு கோப்பித் தோட்டங்களில் இவர்கள் உழைப்புக்கு எவ்விதமான பணமும் வழங்கப்படவில்லை என்றும் காப்பிக் கொட்டைகளைக் கொண்டு வந்து முஸ்லீம் மக்கள் கடைகளிலும் செட்டி மக்கள் கடைகளிலும் கொடுத்து பண்ட மாற்றம் செய்தனர் என்பதைக் குறிப்பிடுகின்றது.
1869ம் ஆண்டு இலங்கையின் மடுல்சீமைப் பகுதியில் கோப்பிப் பயிரைப் பாதித்த நோய் ஒரே வருடத்திற்குள் மலைநாடு முழுவதுமாக பரவி 1870ம் ஆண்டில் கோப்பி பயிர்களை முற்றாக அழித்துவிட்டது. இதன் பின்னரே தேயிலையை அறிமுகப்படுத்திய நிகழ்வும் மலையகத்தில் தேயிலைப் பயிரிடுதல் முயற்சிகள் தொடங்கின.
இப்புகைப்படத்தில் தமிழகத்திலிருந்து மலையகத்தோட்டத்தில் பணிபுரிய வந்த தமிழ்மக்களைக் காணலாம். இது ஒரு போஸ்கார்ட் முகப்புப் பக்கத்தில் அச்சிடப்பட்ட புகைப்படம்.
குறிப்பு:
மலையகத் தமிழர்கள் வரலாறு (2003) சாரல் நாடன்
நன்றி-
சேகரிப்பு:திரு.முருகையா வேலழகன், ஓஸ்லோ, நோர்வே. ( இணையம் வழி ஏலத்தில் வாங்கப்பட்ட கி.பி 19ம் நூற்றாண்டின் இறுதி அல்லது 20ம் நூற்றாண்டின் ஆரம்பகால புகைப்படம்)
அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[ தமிழ் மரபு அறக்கட்டளை]