Home புகைப்படங்கள் மலையகத் தமிழர் – பஞ்சமும் பயணமும்

மலையகத் தமிழர் – பஞ்சமும் பயணமும்

by Dr.K.Subashini
0 comment

 

ø

100 வருட பழமை வாய்ந்த அஞ்சல் அட்டை இது. இது சோவியத் யூனியன் உருவாகுவதற்கு முன்னர் அன்றைய ரஷியாவின் ஒரு பகுதியாக இருந்த பால்ட்டிக் நாடுகளில் உள்ள ஒரு முகவரிக்கு ஏறக்குறைய நூறாண்டுகளுக்கு முன்னர் சிலோனிலிருந்து அனுப்பப்பட்ட அஞ்சல் அட்டை . இந்த அஞ்சல் அட்டையில் உள்ள குறிப்பின் படி இது 24.7.1907ம் ஆண்டு அனுப்பப்பட்டிருக்கின்றது. இலங்கைத் தமிழர் குடும்பம் ஒன்றின் புகைப்படம் இந்த அஞ்சல் அட்டையின் முன்பக்கத்தில் உள்ளதைக் காணலாம்.

இதனைக் காணும் போது ஒரு கணவன் மனைவி, அவர்களது குழந்தை ஆகியோரோடு ஒரு கணவரை இழந்த பெண்மணியும் அவரது குழந்தையும் (சகோதரியாக அல்லது தாயாராக இருக்கலாம்) நிற்பது போன்று இப்புகைப்படம் அமைந்திருப்பதைக் காணலாம். இன்றைக்கு 110 ஆண்டு கால இலங்கைத் தமிழ்ச்சூழலில் தமிழ் மக்களின் ஆடை அணிகலன்களை விவரிக்கும் ஆவணமாகவும் இந்த அஞ்சல் அட்டையைக் காண்கின்றோம். இலங்கையின் எப்பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்ற செய்தி இல்லை எனினும் இதனைச் சேகரித்தவர் மலையகத் தமிழர் அஞ்சல் அட்டைகளை தொகுப்பாக ஏலத்தில் வாங்கியமையால் இது அனேகமாக நூறாண்டுகளுக்கு முற்பட்ட மலையகத் தமிழர் புகைப்படமாக இருக்கும் என்று கருத வாய்ப்புள்ளது.

தமிழகத்தின் திருநெல்வேலி, ராமநாதபுரம், மதுரை ஆகிய பகுதிகளிலிருந்து இலங்கையின் மலையகப் பகுதிகளுக்கு தமிழ்மக்கள் கோப்பித் தோட்டங்களில் பணிபுரிய வந்தனர். முதலில் படகுகளிலும் தோணிகளிலும் வந்தனர். பின்னர் 1868, 1869 காலகட்டங்களில் பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்தும் பிரஞ்சு இந்தியாவிலிருந்து கப்பல்களில் தமிழ் மக்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இப்படி வந்த கலங்களில் 1868ம் ஆண்டு வந்த “ஆதிலெட்சுமி” என்ற கலத்தில் வந்த 120 தமிழ் மக்களும் பயணத்தில் நடந்த விபத்தில் கடலில் மூழ்கி மாண்டனர்” என்ற செய்தி கிடைக்கின்றது.

மதுரையில் அக்காலகட்டத்தில் தற்காலிக கலெக்டராக இருந்த ஒருவரின் குறிப்புக்களில் உள்ளபடி “1877ம் ஆண்டு மதுரையில் இருந்த கிராமங்கள் பெருவாரியாக பஞ்சத்தில் நாசமாகிவிட்டதாகவும், மக்கள் மரம், செடி, கொடிகளின் வேர்களைப் பறித்து சுத்தம் செய்து அதனை உணவாக உண்டனர் என்றும் அறிய முடிகின்றது. இப்படி பறிக்கும் வேர்களை இரண்டு நாட்கள் நீரில் ஊரறவைத்து மூன்று நான்கு முறை அந்த வேரை நீரில் கழிவு விட்டு சாப்பிடுவர் என்றும், அப்படி சாப்பிட்டவர்களில் பலர் இறந்து போயினர் என்றும் குறிப்பு உள்ளது. இதே தகவலை திருநெல்வேலி கலெக்டர் ஏ.ஜெ.ஸ்டூவர்ட்டும், வட ஆற்காட்டு கலெக்டர் வைட் சைட்டும் மதுரையில் கலெக்டராக இருந்த எச்.ஈ மெக்குவேல் ஆகியோரும் அன்றைய சூழலில் பஞ்சத்தால் மக்கள் அனுபவித்த சிரமங்களைப் பதிந்திருக்கின்றனர்.

எச்.ஈ மெக்குவேல் தன் குறிப்பில் ”தென் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு ஆற்று வெள்ளம் போல மக்கள் சென்றனர் என்றும் இப்படிச் சென்றவர்களில் ராமநாதபுரத்திலிருந்து அதிகம் பேர் சென்றனர்” என்றும் பதிகின்றார். தமிழகத்தில் பஞ்சம் நேரிட்ட போது முதலில் மக்கள் பிச்சை எடுக்கத் தொடங்கினர் என்றும், பிச்சை போடக் கூட மனிதர்கள் இல்லாத நிலையில் தங்கள் ஆடு, மாடு, நிலங்கள் தங்கள் பெண் குழந்தைகள், மனைவிமார் எல்லோரையும் விற்றனர் என்றும் விவரிக்கின்றார். இக்காலச் சூழலில் மக்கள் போதிய உணவின்றி கிழங்குகளைப் பிடுங்கித் தின்றனர் என்றும் எலிகள், பூனைகள் என கிடைத்தவை எல்லாவற்றையும் பசிக்கு உண்டனர் என்றும் அதனால் நோய்வாய்ப்பட்டு ஆயிரக்கணக்கில் இறந்தனர் என்றும் குறிப்பிடுகின்றார்.

ஒரு புறம் பஞ்சம், மறுபுறம் உயர்சாதியினரின் சித்திரவதைகள் என்று இம்மக்களின் நிலை துன்பத்தில் உழன்றதைக் காண்கின்றோம்.

1886ல் இலங்கைக்கு கடல்பயணமாக இந்தியர்கள் வரும் வழிகளாக மூன்று வழிகள் குறிப்பிடப்படுகின்றன.

1. பிரிட்டிஷ் இந்தியாவின் நீராவிக் கப்பலில் பாம்பனிலிருந்து மன்னார் வரைக்குமென இந்த வழி அமைந்திருந்தது. 1 ரூபாய் கட்டணம் என்ற வகையில் இந்தப் பயணம் அமைந்தது. மன்னார் வந்த பின்னர் வடபாதை வழியாக மாத்தளை வரைக்கும் நடைவழி பயணமாக வந்தனர்.

2. தூத்துக்குடியிலிருந்து கொழும்பு வரை ரூபாய் 4 கட்டணமாகச் செலுத்தி பயணம் செய்து இலங்கை வந்தனர்.

3. மூன்றாவது பயணம் தொண்டியிலிருந்து கொழும்பு வரைக்கும் என்று மரக்கலங்களின் வழி அமைந்த பயணம்

அக்காலச் சூழலில் கொழும்பு நகரில் ‘குவாரண்டைன் கேம்ப்’ ஒன்றும் 1911ம் ஆண்டு வரை நடத்தப்பட்டது என்பதையும் அறிகின்றோம். நோயால் பாதிக்கப்பட்டோர் என்றால் திருப்பி அனுப்பப்படும் சூழலில் அது இயங்கியது.

பஞ்சம் பிழைக்க இலங்கை வந்த தமிழ் மக்களின் மலையகக் குடியேற்றம் தொடர்ச்சியாக பல இன்னல்களை அனுபவித்த வலி மிகுந்த வாழ்க்கையையே மலையகத் தமிழ் மக்களுக்கு வழங்கியது. குடியுரிமைப் பற்றிய ஒரு பிரச்சனை மட்டுமே பிரச்சனையென்றிலாமல் பலகோணங்களில் அல்லல் நிறைந்த வாழ்க்கையாகவே இம்மக்களின் வாழ்க்கை நிலை அமைந்தமையை முறையாகப் பதிவதும் ஆவணப்படுத்துவதும் அவசியமாகின்றது.

குறிப்பு:
மலையகத் தமிழர்கள் வரலாறு (2003), சாரல் நாடன்.

நன்றி-
சேகரிப்பு:திரு.முருகையா வேலழகன், ஓஸ்லோ, நோர்வே. ( இணையம் வழி ஏலத்தில் வாங்கப்பட்ட கி.பி 19ம் நூற்றாண்டின் இறுதி அல்லது 20ம் நூற்றாண்டின் ஆரம்பகால புகைப்படம்)

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[ தமிழ் மரபு அறக்கட்டளை]

You may also like

Leave a Comment