747
அக்ட் 2, 2018
நுவரெலியாவில் பேருந்து நிலையத்திலிருந்து கண்டி நோக்கிய எமது பயணத்தின் இடையே ஒரு ஆவணப்பாதுகாப்பகம் இருப்பதாக பேராதனைப் பல்கலைக்கழக நூலகர்.திரு.மகேஸ்வரன் தெரிவிக்க, அதனை அறிந்து கொள்ள தொடர்ந்தது தமிழ் மரபு அறக்கட்டளையின் பயணம்.
பேருந்து நிலையத்தில் மாலை 5 மணி வாக்கில் இறங்கினோம். எங்களுக்காக ஆட்டோ வாகனத்தை ஓட்டிக் கொண்டு வந்திருந்தார் ஒரு நண்பர். அவர் வேறு யாருமல்ல. அந்த ஆவணப்பாதுகாப்பகத்தின் அதிகாரி திரு. சந்தனம் சத்தியனாதன். அவரோடு ஆட்டோவில் ஏறக்குறைய 30 நிமிட பயணம். பசுமை எழில் நிறைந்த பகுதியில் கரடு முரடான சாலை. எங்கள் பயணம் தேயிலைத் தோட்டத்தின் ஊடே வழியில் சந்தித்த பெண் ஊழியர்களுடன் ஒரு கலந்துரையாடல் பதிவினையும் சேர்த்துத் தொடர்ந்தது.
கி.பி.19ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் தமிழகத்தில் நிலவிய கொடுமையான பஞ்சத்தை எதிர்கொள்ள முடியாது உயிர் வாழ புதிய நிலங்களுக்குப் புலம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான தமிழ் மக்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானோர் இலங்கையின் மலையகப்பகுதிக்கு வந்தனர். கடுமையான பல இன்னல்களைச் சமாளித்து காடுகளில் நீண்ட தூரம் கால்நடையாகவே பயணித்து மலையப்பகுதிகளுக்கு வந்தனர். முதலில் காப்பித் தோட்டங்களில் பணியில் ஈடுபட்டனர் இந்த மலையகத் தமிழ் மக்கள். காப்பித் தோடங்கள் பாதிக்கப்பட்டபோது தேயிலைத் தோட்டங்கள் உருவாகத் தொடங்கின. புதிய நிலத்திற்கு வந்தாலும் இங்கும் பல்வேறு இன்னல்களின் தொடர்ச்சி அவர்களை நம்பிக்கை இழக்க வைக்கவில்லை. அப்படி வந்து இலங்கையின் கணிசமான மக்கள் தொகையாக இன்று நிலைபெற்று விட்ட இந்திய வம்சாவளி தமிழர்களைப் பற்றியதே இந்தப் பதிவு.
இன்றைய நிகழ்வு நாளைய வரலாறு. முறையான ஆவணப்படுத்தலின் அவசியத்தை உணர்ந்து மலையகத் தேயிலைத் தோட்ட மக்களின் வாழ்க்கை வரலாற்றினைப் பதிவு செய்திருக்கின்றது இங்குள்ள தேயிலைத் தோட்ட அருங்காட்சியகம். இலங்கையின் மலையகத்தில் நியூ பீக்கோக் தேயிலை எஸ்டேட் ராமன் துறை பகுதியில் அருங்காட்சியகம் மற்றும் ஆவணப் பாதுகாப்பகத்தில் அதிகாரியாகப் பணியாற்றி வரும் திரு. சந்தனம் சத்தியனாதன் இந்த விழியப் பதிவில் இந்த அருங்காட்சியகத்தைப் பற்றியும் மலையகத்திற்குத் தமிழக மக்கள் தொழிலுக்காகப் புலம் பெயர்ந்த வரலாற்று நிகழ்வுகளையும் விவரிக்கின்றார்.
புதிய வாழ்க்கையைக் கடினமான சூழலில் அமைப்பது எளிதல்ல. சொந்தங்களை இழந்து வாழ்வா சாவா என்ற சூழலிலேயே தினம் தினம் அன்று வாழ்ந்த அம்மக்களின் வாழ்க்கைச் சூழலில் இன்று படிப்படியாக சில மாற்றங்கள் வந்துள்ளன. ஆனாலும் நிவர்த்திக்கப்படாத பல அடிப்படை தேவைகள் அப்படியே இன்றும் தொடர்வது தான் அவலம்.
மலையகத் தமிழர்கள் பற்றிய வரலாற்று பின்புலத்தை அறிந்து கொள்ள விரும்பும் ஆய்வாளர்களுக்கு இந்த விழியப் பதிவு பல தகவல்களை வழங்குகிறது.
விழியப் பதிவு & தொகுப்பாக்கம்: முனைவர்.க.சுபாஷிணி ( THFi ஜெர்மனி)
அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]