வரலாற்றுச் சான்றுகளைச் சேகரித்து வைக்கும் ஆவணப்பாதுகப்பகங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் பற்றி அறிந்திருப்போம். அரசுகளும் தனியார் நிறுவனங்களும் செய்யும் இவ்வகை முயற்சிகளைப் போல வரலாற்றுத் தரவுகளில் ஆர்வம் கொண்ட சில தனிநபர்களும் ஆவணங்களைச் சேகரிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
அந்த வகையில் இலங்கை, இலங்கைத் தமிழர்கள் தொடர்பான ஆவணங்களைத் தன் சொந்த பணத்தைச் செலவிட்டு இணையத்தின் வழி ஏலத்தில் எடுத்து சேகரித்து வைத்துப் பாதுகாக்கின்றார் திரு.முருகையா வேலழகன். இவர் 1980களின் வாக்கில் இலங்கையிலிருந்து வெளியேறி தமிழகத்தில் சில ஆண்டுகள் இருந்து பின்னர் நோர்வே நாட்டிற்கு வந்து குடியேறியவர். இன்று தமது குடும்பத்தினருடன் ஓஸ்லோ நகரில் வசித்து வருகின்றார். நோர்வேஜியன் மொழியைக் கற்றுக் கொண்டு தமிழ்ச்சங்கத்திலும் பொறுப்புமிக்க பணியை மேற்கொண்டுள்ளவர்களில் ஒருவர் இவர்.
இவரது சேகரிப்பில் உள்ள
-நூறு வருடங்களுக்கு மேற்பட்ட யாழ்ப்பாணம், மலையகத் தமிழ் மக்கள் தொடர்பான அஞ்சல் அட்டைகள்
-இலங்கை நில வரைபடங்கள்
-பாரம்பரிய ஈய, பித்தளை, வெண்கல பாத்திரங்கள்
-வித்தியாசமான எழுத்தாணி
-புகைப்படங்கள்
ஆகியனவற்றை இந்த விழியப் பதிவில் காட்சி படுத்துகின்றார்.
இவர் சேகரிப்பில் உள்ள இந்த அரும்பொருட்களின் மின்னாக்க வடிவங்களைத் தமிழ் மரபு அறக்கட்டளைக்காவும் வழங்கியிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவற்றோடு தான் நோர்வே நாட்டிற்கு வந்த போது நோர்வே தனக்கு அளித்த ஆதரவு, பாதுகாப்பு உதவிகள், தமது ஆரம்பகால வாழ்க்கை நிலை பற்றிய செய்திகளையும் இப்பதிவில் பகிர்கின்றார்.
இலங்கைத் தமிழ் மரபுரிமையின் மீது ஆழ்ந்த பற்று கொண்டிருக்கும் திரு.வேலழகன், யசோதா மற்றும் அவர்களது மகள் சுராதி ஆகியோரை வாழ்த்துகின்றோம்.
அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]