வியப்பிலாழ்த்தும் மட்டக்களப்பு ஆகமம் சாரா தெய்வ வழிபாட்டுமுறைகளும் சடங்குகளும்- 12
மௌனகுரு
மட்டக்களப்பு, இலங்கை
சிறு தெய்வ வணக்கமுறைகளில்
- ஆடல்
- பாடல்,
- படைத்தல்,
- படைத்ததைப் பகிர்ந்து உண்ணல்
- உண்டாட்டு
- பாதீடு
- அனைவரும் இணைதல்
ஆகிய பண்புகள் நிறைந்திருக்கும்.
மக்களின் வேண்டுதல் கூட தனக்கு எனப் பெரும்பாலும் இல்லாமல் தமக்கு எனவே அதிகமாக இருக்கும். அம் மக்களின் வேண்டுதலில்கிராம மக்கள் நோய் நொடியின்றி வாழல். முக்கியமாக
- அம்மை,
- வைசூரி
- குக்கல்
- மற்றும் கிரஹ தீவினைகள்
போன்ற
- நோய்களில் இருந்து கிராம மக்கள் விடுதலை பெறல்
- வெம்மை நீங்கிக் கிராமம் குளிர்ச்சி பெறல்
- என்பனவையே பெரும்பாலும் இடம் பெறும்.
- இப்பண்புகள் பண்டைய கூட்டு வாழ்க்கை முறையின் எச்ச சொச்சங்கள் ஆகும்
- சிறு வணக்கங்களுடன் சம்பந்தப்பட்ட ஆட்ட முறை கலந்து நாடக அமிசம் நிரம்பிய சடங்குகள்
மட்டக்களப்பின் வணக்க முறைகளில் சிறு தெய்வங்கள் பிரதான பங்கு பெறுகின்றன. சிவன், திருமால், முருகன், பிள்ளையார் போன்ற பெருந்தெய்வங்களுக்குரிய கோயில்கள் ஊர்கள் தோறும் உள்ளன. அக்கோயில்களில் தினமும் பூசைகள் நடைபெறுகின்றன.
எனினும் ஆண்டுக்கொருமுறை குறிப்பிட்ட தினங்களிலே சிறு தெய்வங்களுக் குரிய கோயில்களில் பூசை நடைபெறுகிறது
சடங்குகள்
இப்பூசை சடங்கு என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.
- வைரவர் கோயிற் சடங்கு,
- கண்ணகி அம்மன் கோயிற் சடங்கு
என்ற சொற் பிரயோகங்களை கவனிக்குக.ஊர்கள் தோறும் சிறு தெய்வங்களுக்குரிய கோயில்கள் உள்ளன. கட்டப்பட்ட கோயில்கள் இல்லாது ஒரு குறிப்பிட்ட இடத்தில் மரத்தடியில் சிறு தெய்வ வணக்கத்தை ஆண்டுதோறும் நடாத்தும் ஊர்களும் உண்டு.
இத்தகைய ஆண்டுச் சடங்குகள் அவ்வக் கிராமங்களில் மிகப் பிரதானமானவையாகக் கணிக்கப்படுகின்றன. கிராம மக்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்திருக்கின்றன. அவர்களின் கலாசாரம், பண்பாடு உளவியல் பிரதிபலிப்புக்களாயுள்ளன. கிராமத்தவரின் சமூக உறுதிப் பாட்டைத் தருவனவாகவும் இவை உள்ளன.
நடத்தும் முறை
ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்டதொரு தினத்தில் அக்கோவில் கதவு திறக்கப்பட்டு 5 அல்லது 6 அல்லது 7 நாட்கள் சடங்கு முடிந்த பின் கோவிற் கதவுகள் சாத்தப்படும்,
- பின்னர் அடுத்த ஆண்டுதான் அக்கதவு திறபடும்.
- வருடம் ஒரு பூசைதான் இத்தெய்வங்களுக்கு சடங்குநடக்கும் .இந்த நாட்கள் அவ்வூரின் புனித நாட்களாகும்.
- மட்டக்களப்புப் பகுதியில் ஏறத்தாழ ஐம்பதுக்கு மேற்பட்ட சிறு தெய்வங்களை
மக்கள் வழிபடினும் மிகப் பிரதானமான சிறு தெய்வங்களாகக் சிலவே கொள்ளப்படுகின்றன. மட்டக்களப்பின் சாதி அமைப்பினைப் பின்னணியாகக் கொண்டு பார்க்கும்போது சில தெய்வங்கள் சில சாதியினருக்குப் பிரதான தெய்வமாகக் காணப்படுகின்றன. குறிப்பிட்ட சாதியினருக்குப் பிரதான தெய்வமாகக் காணப்படும் தெய்வம் வேறோர் சாதியினரால் வணங்கப்படினும் அது பிரதானம் குறைந்த தெய்வமாகக் காணப்படுகிறது.
பிரதான தெய்வத்திற்கென அமைந்த கோயிலில் அமைக்கப்பட்ட சிறு சிறு பந்தல்களில் பிரதானம் குறைந்த ஏனைய சிறு தெய்வங்களுக்குப் பூசை நடைபெறுகிறது.
ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு பிரதான தெய்வமுண்டு. எனினும் அப்பிரதான தெய்வத்துடன் வேறு பல தெய்வங்களுக்குப் பந்தலிட்டு ஒரு கோயிலிலேயே வணங்கும் முறை இங்கு உண்டு. ஆனால் பெரிய கோயிலும் மூலஸ்தானமும் பிரதான தெய்வத்திற்கே உரியவை. உதாரணமாக நரசிங்க வைரவரைப் பிரதான சிறு தெய்வமாகக் கொண்ட நரசிங்க வைரவ சுவாமி கோயிலில் சிங்கனாதம், கங்காதேவி, காத்தவராயன், காளி, மாறா, வதனமார், மாரியம்மன், திரிசூல வைரவன், வீரபத்திரன். கிரஹசாந்தி, ஐயனார் போன்ற சிறு தெய்வங்களுக்குத் தனித்தனிப் பந்தல்கள் அமைக்கப் பட்டு அவற்றிற்குப் பூசை நடைபெறுவதுண்டு.
காளியைப் பிரதான தெய்வமாகக் கொண்ட காளி கோயிலில் மாரியம்மன், பேச்சியம்மன், பிறத்தி சங்கிலி காளி, வீரபத்திரன். வதனமார், நரசிங்கம், அனுமார், கங்காதேவி, திரிசூலவைரவர், ஆதி வைர வர், ஆகிய தெய்வங்களுக்கு எனத் தனிப் பந்தல்களுண்டு.
கண்ணகி அம்மனைப் பிரதான தெய்வமாகக் கொண்ட கோயில்களில்
மாரியம்மன், காளியம்மன். வீரபத்திரன், ஆதி வைரவர் ஆகிய தெய்வங்களுக்குத் தனிப் பந்தல்களுண்டு.
பெரிய தம்பிரானைப் பிரதான தெய்வமாகக் கொண்ட கோயில்களில் மாரியம்மன், காத்தான், நீலாசோதயன், கம்பகாமாட்சி, பத்தினியம்மாள், வதனமார், காடேறி, பேய்ச்சியம்மன், அனுமார், சிங்கனாத வைரவர், பிரத்தியங்கிரிக் காளி, ஆகிய தெய்வங்களுக்குப் பந்தல்களுண்டு
- அம்மன் முகக் களை
- திரி சூலம்
- கும்பம்
- அட்சரம் கீறப்பட்ட வெண்கலத் தகடு
என்பன மூலஸ்தானதிலுள்ள பீடத்தின் மீது வைத்து வணங்கப்படுவது பண்டைய வழக்கம்.
பின்னாளில் வெண்கலத்தாலான சிலைகள் பீடத்தின் மீது வைக்கப்படவும் ஆயிற்று, இவற்றை வைக்காது
பழையபடி முகக்களை, அட்சரத் தகடு, சூலம் என்பனவற்றையே வைக்க வேண்டும் என்று தெய்வமேறி ஆடியோர் கலை வந்து கட்டளையிட்டதாகவும் அவை கவனத்தில் எடுக்கப்படவில்லை எனவும் பல கதைகள் பல ஊர்களிலுமுண்டு வேப்பிலை இங்கு பிரதானம் பெறுகிறது.
ஒவ்வொரு கோவில்களிலும் வேப்ப மரங்கள் நிறைந்து இருக்கும் . வேப்பம் கிளைகளை வெட்டி அதிலிருந்து வேப்பம் இலைகளைக் கொய்யும் காட்சி மனதை நிரப்பும். காலிலும் கைகளிலும் சிலம்பணிந்து ஆடுவோரும் உண்டு. மாரி அம்மன் அம்மனைக்காயைக் கைகைகளுக்குள் வைத்து அவ்வோசை வெளியில் வர ஆடி வரும். பின்னணி இசையாக உடுக்கோசை இடம் பெறும். உடுக்கின் உறுமல் அவ்வாடலுக்கு ஒரு வேகம் தரும். மந்திர உச்சாடனங்காளைப் பூசாரியார் சொல்லி அழைத்தால் தெய்வம் குறிப்பிட்ட நபரில் வெளிப்படும். தெய்வம் ஏறியோர் உடுக்கு,தவில் சிலம்பு ஓசையிஉன் பிண்ணணியில் ஆடுவர் அபிநயிப்பர். முன்பு கூறியது போல சாதிக்கொரு தெய்வக் கோவில் உண்டு.
சாதிக்கொரு தெய்வமும் வணக்க முறைகளிற் சிற்சில வேறுபாடுகளும் இருப்பினும் கோயில் அமைப்பு முறையிலும், பந்தல்களைக் கோயிலை மையமாகக் கொண்டு அமைக்கும் முறையிலும், சடங்குகளை நிகழ்த்திக் காட்டுகையில் மக்கள் கோயிலைச் சுற்றி வட்டமாகஅமர்ந்திருந்து பார்க்கும் முறையிலும், சடங்குகளில் மக்கள் பங்காளராகவும், பார்வையாளராகவும் இடம் பெறும்வகையிலும் சகல சாதியினரிடத்தும் ஒற்றுமை காணப்படுவது இங்கு அவதானத்திற்குரியது.
மட்டக்களப்பு கோயில்கள் கற்களால் கட்டப்பட்டமை மிகப் பிற் காலத்திலாகும். முன்பு மரத்தடியில் பந்தலிட்டுஅல்லது சிறு குடிசையிட்டு வணங்கும் வணக்க முறையே இருந்தது. பின்னாளில் பல தெய்வங்களுக்கும் பந்தலிட்ட போதே அமைப்பு முறை உருவாகியிருக்க வேண்டும்.
இன்றும் மட்டக்களப்பில் எல்லாச் சிறு தெய்வங்களுக்கும், கட்டப்பட்ட கோயில்கள் உள்ளன என்ற கூற முடியாது .இவற்றிற்கெனச் சிறு சிறு பந்தல்களே சில இடங்களிலுண்டு.
பொருளாதார பலமும் கோவில்களும் பந்தல்களும்
பந்தல்கள் அமைக்கப்பட்ட கோயிலாக இருப்பதும், கற்களால் கட்டப்பட்ட கோயில்களாக அமைவதும் அவ்வச் சாதியினரின் பொருளாதாரத் தன்மையைப் பொறுத்ததாய் உள்ளது.
அதேபோல புராதனத் தன்மை பேணப்படுவதும், நவீனத் துவங்கள் புகுத்தப்படுவதும் கூட அவ்வச் சாதியினரின் பொருளாதார வளர்ச்சி, வளர்ச்சியின்மையைப் பொறுத்தது.
முன்பொரு காலத்தில் வேடர், வேட வெள்ளாளர் போன்ற மிகப் பின்தங்கிய குழுவினரின் கோயில்கள் பெரும்பாலும் பந்தல் நிலையிலிருந்தன.
அவர்களைவிட சற்று வளர்ச்சி பெற்ற பறை அடிக்கும் தொழில் புரிவோர் சலவைத் தொழில் புரிவோர் போன்றோரின் கோயில்கள் சில இடங்களில் ஒலையால் வேயப்பட்டனவாகவும் சில இடங்களில் மூலஸ்தானம் மாத்திரம் கற்களால் கட்டப்பட்டனவாகவும் இருந்தன.
அவர்களைவிட பொருளாதாரத்தில் வளர்ச்சியுற்ற சீவல் தொழிலாலரின் கோயில் மண்டபங்களைக் கொண்டதாய் இருந்தது.
பொருளாதார பலம் பெற்ற ஏனையோரின் கோயில்கள் கல் மதில்களோடு அமைந்திருந்ததனைக் காண முடிந்தது.
இன்றோ அனைவரிடமும் பொருளாதார வசதியுண்டு,தம் வசதிகளி வெளிப்படுத்தும் வகையில் இன்று அவர் அவர் பொருளாதார வசத்திக்கு ஏற்பக் கோவிகளும் வழிபாடுகளும் மாறி விட்டன.”
(தொடரும்)
படம் 1: மாரி அம்மன் முகக்க்களை
படம் 2. ஆரையம்பதி கண்னகை அம்மன் கோவில்
படம்1 வேப்பிலையைத் தயார்படுத்தும் பக்தர்கள்
படம் 4, மாரி அம்மன் ஏந்தி ஆடும் அம்மனைக்காய் சிலம்பு
(அரங்கம் பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது)