Home article சர்வதேச மனித உரிமைச் சாசனம் 1948 – மானிடத்தின் சாதகம் – புத்தக விமர்சனம்

சர்வதேச மனித உரிமைச் சாசனம் 1948 – மானிடத்தின் சாதகம் – புத்தக விமர்சனம்

by Themozhi
0 comment

சர்வதேச மனித உரிமைச் சாசனம் 1948 – மானிடத்தின் சாதகம் – புத்தக விமர்சனம்

முனைவர்.க.சுபாஷிணி

பிறந்தது முதல் இறக்கும் வரை இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு தனி மனிதருக்கும் அடிப்படை உரிமைகளும் சுதந்திரமும் கட்டாயமான அடிப்படைத் தேவையே. எவ்வகையான நம்பிக்கையைக் கொண்டிருந்தாலும், எந்தச் சமூகத்தில் பிறந்திருந்தாலும், எந்த இனக்குழுவில் அடையாளப்படுத்தப்பட்டாலும் அவற்றிற்கு அப்பால் ஒரு தனி மனித சுதந்திரம் என்பது முக்கியத்துவம் பெறுகின்றது. ஒரு தனி மனிதர் தாம் சார்ந்திருக்கும் இனத்தின் அடிப்படையிலோ, அல்லது தான் நம்பிக்கை கொண்டிருக்கின்ற ஒரு மதத்தின் அடிப்படையிலோ, அல்லது தான் வாழ்கின்ற சமூகச் சூழலினாலோ, அல்லது தான் வாழ்கின்ற நாடு பிரகடனப்படுத்தியிருக்கும் சட்டங்களினாலோ, தனி மனிதர்கள் தங்களின் சிந்தனையின் வடிவங்களை முழுமையாக வெளிப்படுத்த முடியாத நிலை அல்லது தடைகள் என்பன ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு. ஆயினும் கூட பொது நலனைக் கருத்தில் கொண்டு, சட்ட ரீதியாக வடிவமைக்கப்படும் கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொண்ட வகையில் தனி மனித சுதந்திரம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில், தனி மனித சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் வெளிப்படுத்த சுதந்திரப் போக்கு ஏற்பட வேண்டியது இன்றியமையாத தேவையாகின்றது. ஒரு தனி மனிதரின் முழுமையான சிந்தனை வளர்ச்சிக்கு அது வாய்ப்பினை வழங்குவதாகவும் அமைகின்றது.

வரலாற்றினைப் பின்னோக்கிப் பார்க்கும் போது, ஒரு தனி மனித சிந்தனைச் சுதந்திரத்தை உலகம் முழுவதுமே பண்டைய அரசுகள் எதிர்த்தன, அரசியல் அமைப்புக்கள் மறுத்தன என்பதைக் காண்கின்றோம். மூலிகை மருத்துவத்தை அறிமுகப்படுத்திய ஆயிரக்கணக்கான பெண் அறிவு ஜீவிகள் சூனியக்காரர்கள் என அழைக்கப்பட்டு உயிரோடு எரிக்கப்பட்ட வரலாறு ஐரோப்பாவின் கடந்த சில நூற்றாண்டுகள் வரை நிகழ்ந்தமையை இதற்கு நாம் உதாரணமாகச் சொல்லலாம். கலிலியோவின் கண்டுபிடிப்புக்களை ஏற்க மறுத்த வாட்டிக்கனின் சிந்தனை மறுப்பும், லியானார்டோ டாவின்சியின் சிந்தனை பரப்பிற்கு ஈடுகொடுக்க முடியாது திணறிய அரசுகளும் இன்று அத்தகைய அறிவியல் அறிஞர்களின் ஆய்வினால் பெருமை கொள்கின்றன. கல்வியே மனித வாழ்விற்கு ஆதாரம், கல்வியே மனிதக் குல மேன்மைக்கு வழிகாட்டி, கல்வியும் ஆய்வுகளும் தான் மனித குலத்தை மேம்படுத்தும் என்று முயன்றவர்களால் தான் உலகம் இன்று மேம்பட்டுள்ளது. மிக இருக்கமான சமுதாய சூழலில் கடந்த நூற்றாண்டுகளில் வீட்டை விட்டு வெளிவர வாய்ப்பில்லாது இருந்த பெண்கள், ஆணுக்கு மட்டும் கல்வி, என்ற கோட்பாட்டை உடைத்து தனி மனித கல்வி உரிமையைப் போராடி பெற்றுள்ளனர். ஆயினும் கூட, தனி மனித உரிமைகள் மீறப்படும் நிகழ்வுகள் உலகம் முழுவதும் தொடர்கின்றன என்பது உண்மை.

கடுமையான சூழலில் மாட்டிக் கொண்ட பலருக்கு, ஒரு தனி மனிதருக்கு உரிமையும் உண்டா? என்ற ஐயப்பாடு எழுவது இயல்பே.

இந்த ஐயப்பாட்டை நிவர்த்தி செய்ய வேண்டுமென்றால் சர்வ தேச அளவில் தனி மனிதருக்கு வழங்கப்பட்டுள்ள தனி மனித உரிமை பற்றிய புரிதல் என்பது ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டியது மிக அவசியமாகும்.

ஐக்கிய நாடுகளின் சபையில் உறுப்பினராக அங்கம் வகிக்கும் நாடுகளில் 58 நாடுகளால் இனைந்து உருவாக்கப்பட்டதே மனித உரிமைச் சாசனம். இந்தத் தனி மனிதருக்கான உரிமைகளைப் பற்றி விளக்கும் மனித உரிமைச் சாசனம், உலக நாடுகளில் 194 நாடுகளால் அதிகாரப்பூர்வ மனித உரிமை அடிப்படை சாசனமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

தனி மனித உரிமைகளை மறுப்போர் பலர் உள்ளனர். அவர்களுக்கு அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட உரிமைகள் யாவை என்பதை விளக்க இந்த சாசனத்தைப் பற்றி பேச வேண்டியது அவசியமாகின்றது. அதே வேளை, தனி மனித உரிமைகளில் ஈடுபாடு கொண்டு உழைக்கும் சமூக நல அமைப்புக்களுக்கும் சமூக நல ஆர்வலர்களுக்கும் இந்தச் சாசனம் அளிக்கின்ற விவரங்கள் தங்கள் முயற்சிகளில் அவர்கள் சிறப்புடன் செயலாற்ற வழிகாட்டியாகவும் அமைந்துள்ளது.

இந்தச் சாசனங்களை விளக்கி தமிழில் ஒரு நூலாக வடித்திருக்கின்றார் இலங்கையில் பிறந்து வளர்ந்து இன்று இங்கிலாந்தின் லண்டன் மாநகரில் வசிக்கும் இனிய நண்பர் தேச இலங்கை மன்னன். உலகளாவிய மனித உரிமைகளைப் பற்றிய தெள்ளிய பின்புலத்தை அறிந்தவர், இலங்கையில் தமிழ் மக்களுக்கான சமூக நீதி சார்ந்த நடவடிக்கைகளின் பின்புல அனுபவங்கள் என்பதோடு பரந்த வாசிப்பும் கொண்டவர் இவர் என்பது இந்த நூலுக்கு உள்ள ஒரு தனிச்சிறப்பு எனலாம். 2016ம் ஆண்டு டென்மார்க் வீயன் நகரில் நிகழ்ந்த ஒரு தமிழ் பண்பாட்டுக் கலைவிழாவில் நான் கலந்து கொள்ளச் சென்றிருந்த வேளை இந்த நூல் எனக்கு வழங்கப்பட்டது. அதன் ஆசிரியர் முன்னிலையில் இந்த நூலைக் கிடைத்த குறுகிய நேரத்தில் வாசித்து முடித்து ஒரு விமர்சன சொற்பொழிவு ஆற்றினேன். ஒரு குறுகிய சூழலுக்குள் மட்டும் இந்த நூல் அடங்கி விடக்கூடாது என்பதாலும், இந்த நூலுக்குப் பரந்த வாசிப்பு ஏற்பட வேண்டுமென்ற எண்ணத்தினாலும் இந்த நூலை விவரித்து சில தகவல்கள் இப்பதிவில் பகிரப்படுகின்றன.

“சர்வதேச மனித உரிமைச் சாசனம் 1948 – மானிடத்தின் சாதகம்” என்பது நூலின் பெயர். நூலாசிரியர் தா.தேச இலங்கை மன்னன். இந்த நூல் சென்னை மித்ரா ஆர்ட்ஸ் & க்ரியேஷன்ஸ் பதிப்பகத்தாரால் அச்சிடப்பட்டு 2015ம் ஆண்டு வெளியிடப்பட்டது.

நூல் மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டு தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.

முதல் பாகத்தில் அறிமுகப் பகுதியாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் சாசனம், அதன் பிரகடனம், சர்வ தேச மனித உரிமைகளின் ஆணையத் தோற்றம், மனித உரிமைகளின் சாசனத் தயாரிப்பு, நடைமுறைப்படுத்தலுக்கான யோசனைகள், அமுலாக்கலுக்கான செல்வாக்குமிக்க உடன்படிக்கைகள், நாடுகளுக்கிடையிலான வேறுபாடுகள், இந்தச் சாசன அமைப்பில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியவர்கள், சர்வதேச மனித உரிமைச் சாசனத்தின் அணிந்துரை, ஆகியன வழங்கப்பட்டுள்ளன.

நூலின் இரண்டாம் பாகம் இந்த நூலுக்கான மையப் புள்ளியை விளக்குகின்றது. இந்தப் பகுதியில் விதி எண் ஒன்றிலிருந்து விதி எண் 30 வரை விளக்கப்படுகின்றது. அதிகாரப்பூர்வ ஆவணத்தில் வழங்கப்பட்ட விதி ஆங்கிலத்தில் வழங்கப்பட்டு அதற்கான தமிழ் விளக்கம் ஒவ்வொரு விதிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்த விதிகளுக்கு ஆசிரியர் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கும் படங்கள் விதிகளுக்குப் பொருத்தமில்லாமல் இருக்கின்றன. இவற்றை நீக்குவது அவசியம் எனக் கருதுகிறேன். நூலாசிரியரும் எனது கருத்தை ஏற்பார் என்ற எண்ணம் எனக்குண்டு.

இறுதியாக வரும் மூன்றாம் பாகத்தில், சட்ட வடிவம் பெற்று வரும் இந்த மேற்குறிப்பிட்ட விதிகளில் நடைமுறை அமுலாக்கச் செய்தியும், வளர்ச்சியும் பேசப்படுகின்றன. உதாரணமாகக் குறிப்பிடவேண்டுமென்றால், குற்றவியல் நீதிமன்றத்தைப் பற்றிய ரோம் சாசனத்தின் நிலை, 1966 குடியியல் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கையின் நிலை, 1966 பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கையின் நிலை, பெண்களுக்கு எதிரான எல்லாவித பாரபட்சங்களையும் இல்லாது ஒழிப்பதற்கான மாநாட்டின் நிலை. பலவந்தமாகக் காணாமல் போனோர் பாதுகாப்பு பற்றிய சாசனத்தின் நிலை, வளர்ச்சி உரிமை பற்றிய பிரகடனத்தின் நிலை, மாற்றுத் திறனாளிகளின் உரிமை பற்றிய சாசனத்தின் நிலை என இருபத்தாறு பகுதிகளில் சாசனங்களின் வளர்ச்சி அலசப்படுகின்றது.

உலக நாடுகள் பெரும்பாலானவற்றில் தமிழர்கள் குடியேறியுள்ள இந்தக் காலச் சூழலில், இந்த நூல் நமக்கான அடிப்படை உரிமைகளை நமக்கு எடுத்துரைக்கும் ஒரு வழிகாட்டியாகத் திகழ்கின்றது என்று கூறலாம். திரு. தா. தேச இலங்கை மன்னனின் இந்த நூல் தமிழ் மக்களின் பொது அறிவு நலனுக்கான ஒரு தேவை. இந்த நூலை எல்லோரும் வாசித்து தகவல் பெற்று பலன் பெற வேண்டும் எனக் கருதுகிறேன். இது போன்ற சமூக நலன் சார்ந்த நூல்களை ஆசிரியர் மேன்மேலும் படைக்க வேண்டும் என்றும் என் கோரிக்கையை முன் வைக்கின்றேன்.

 

You may also like

Leave a Comment