Home article கயவாகு காலம்காட்டி முறைமை – எனது கருதுகோள்

கயவாகு காலம்காட்டி முறைமை – எனது கருதுகோள்

by Themozhi
0 comment

கயவாகு காலம்காட்டி முறைமை – எனது கருதுகோள்


— முகுந்தன்
தமிழக வரலாற்றைக் கணிப்பிடும்போது கயவாகு முக்கிய இடத்தைப் பிடித்துவந்துள்ளான். மகாவம்சத்தை மொழிபெயர்த்த ​​வில்ஹெம் கெய்கர் அவர்களின் கருத்துப்படி முதலாம் கயவாகு கி.பி 171 – 193 இல் வாழ்ந்துள்ளான்.
(மறவன்புலவு க. சச்சிதானந்தன் ஐயா மொழிபெயர்த்த  ​​வில்ஹெம் கெய்கர் அவர்களின் “சிங்களவர் வரலாற்று நூல்களின் நம்பகத்தன்மை” நூலின்படி)

​​இந்தக் கயவாகுவே சிலப்பதிகாரத்தில் கூறப்படும் கயவாகு – அவன் சேரன் செங்குட்டுவன் காலத்தவன் எனும் கருத்து ​”1800 ஆண்டுகளுக்கு முன் தமிழர்” எனும் நூலில் வி.கனகசபை அவர்களால் கூறப்பட்டு பலராலும் ஏற்கப்பட்டு மற்றும் மறுக்கப்பட்டு வருகின்றது.
(இராம.கி ஐயா எழுதிய “சிலம்பின் காலம்” நூலிலும் இதனை மறுக்கின்றார்.)

இதற்குக் காரணமான சிலப்பதிகார வரிகள்,

 உரை பெறு கட்டுரை:
அது கேட்டு, கடல் சூழ் இலங்கைக் கயவாகு என்பான் நங்கைக்கு நாள் பலி-பீடிகைக் கோட்டம் முந்துறுத்து-ஆங்கு, ‘அரந்தை கெடுத்து, வரம் தரும் இவள்’ என, ஆடித் திங்கள் அகவையின், ஆங்கு ஓர் பாடி விழாக் கோள் பல் முறை எடுப்ப, மழை வீற்றிருந்து, வளம் பல பெருகி, பிழையா விளையுள் நாடு ஆயிற்று.

வரந்தரு காதை:
அரும் சிறை நீங்கிய ஆரிய மன்னரும்,
பெரும் சிறைக்கோட்டம் பிரிந்த மன்னரும்,
குடகக் கொங்கரும், மாளுவ வேந்தரும்,
கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும்,
‘எம் நாட்டு ஆங்கண் இமயவரம்பனின்
நல்நாள் செய்த நாள் அணி வேள்வியில்
வந்து ஈக’ என்றே வணங்கினர் வேண்ட
‘தந்தேன் வரம்!’ என்று எழுந்தது ஒரு குரல்-

கி.பி 5ம் நூற்றாண்டில் எழுந்ததாகக் கூறப்படும் மகாவம்சத்தில் வரும் முதலாம் கயவாகு தமிழகம் வந்ததாகக் குறிப்புகள் இல்லை. ஆனால் கி.பி 17 ம் நூற்றாண்டளவில் எழுதப்பட்ட இராசாவளி நூலில் கயவாகு தனது தந்தையின் காலத்தில் சோழனால் பிடித்துச்செல்லப்பட்ட 12000 பேருக்குப் பதிலாக 24000 பேரையும் பத்தினித் தெய்வத்தின் பொற்சிலம்பையும்  புத்தரின் புனித பாத்திரத்தையும் (வட்டகாமினி அபயன் காலத்தில் பாண்டியர்களால் கொண்டுசெல்லப்பட்டது ) நீலன் என்பவன் உதவியுடன் கொண்டுவந்தான் எனக் கூறுகின்றது.

பெரும்பாலானோர் அறிந்த முதலாம், இரண்டாம் கயவாகு தவிர்ந்த வேறும் சில கயவாகு பற்றி மட்டக்களப்பு மான்மிகம் கூறுகின்றது… புவனேய கயவாகு என்னும் கலிங்ககுமாரன் , சோழ இளவரசியை மணந்து, பின்பு இலங்கை வந்து ஒரு பிரதேசத்தை ஆண்டான் எனக் கூறுகின்றது. இந்த புவனேய கயவாகு மற்றும் அவன் மகன் மனுநேய கயவாகுக்கும் சிலப்பதிகாரம் கூறும் கதைக்கும் ஏதாவது தொடர்புள்ளதா எனப் பார்ப்போம்.

இலங்கை வரலாறு கூறும் தமிழ் நூல்கள்:
இலங்கையில் தமிழர் வரலாற்றை அறிவதற்கு எழுதப்பட்ட நூல்களில் கைலாய மாலை, வையாபாடல், பரராசசேகரன் உலா , இராசமுறை,  யாழ்ப்பாண வைபவமாலை , மட்டக்களப்பு மான்மியம் , பெரியவளமைப் பத்ததி, குளக்கோட்டன் கம்பசாத்திரம், கோணேசர் கல்வெட்டு , கைலாச புராணம், என்பனவையும் அடங்கும்… இவை மிகப்பிற்காலத்தில் எழுந்த நூல்கள். வரலாறு மற்றும் காலவரிசைகளில் நிறையக் குழப்பங்கள் காணப்படினும், அவற்றைக் குறைத்து மதிப்பிடவேண்டியதில்லை.

இதில் மட்டக்களப்பு மான்மியம் என்பது வழிவழியாக சுவடிகளில் எழுதப்பட்டு வந்த வரலாறு எனக் கூறப்படுகின்றது.

(நூலகம் திட்டத்தில் : http://www.noolaham.org/wiki/index.php/மட்டக்களப்பு_மான்மியம்)

இதனை முழுமையான ஒரு வரலாற்று ஆவணமாகக் கருதமுடியாவிட்டாலும் மற்றைய ஆவணங்கள் கூறும் விடயங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க உதவியாக இருக்கும்.

இதனைப் பதிப்பித்த F. X. C. நடராசா பின்வருமாறு கூறுகின்றார்…
மட்டக்களப்பின் சரித்திரத்தைக் கூறும் இந்நூல் யாரால் எந்த ஆண்டில் எழுதப்பட்டதென்ற விபரங்களை நூன்முகத்தானும், மறுமுகத்தானும் அறிந்து கொள்ள முடியவில்லை. நூலின் போக்கினையும் வாக்கினையும் நோக்குமிடத்து இது பல்லோரால் பற்பல காலங்களில் எழுதிச் சேர்க்கப்பட்டதென்பது புலனாகின்றது.

ஏட்டு வடிவத்தில் மட்டக்களப்புச் சரித்திரம் இதுவரை அடங்கிக் கிடந்தது.  மயில்வாகனப் புலவரால் எழுதப்பட்ட யாழ்ப்பாண வைபவமாலை எழுந்தகாலத்தே இந்நூலின் ஒரு சில பகுதி எழுதப்பட்டிருக்கலாம் என்று கருத நூலிற் சில பகுதிகள் சான்று பகருக்கின்றன. இந்நூலில் ஆதி காலந்தொட்டு ஒல்லாந்தர் காலம்வரையுள்ள சரித்திரம் கூறப்பட்டிருக்கிறது. ஆங்கிலேயரின் ஆட்சித் தொடக்கமும் ஓதப்பட்டிருக்கிறது.

மகாவம்சத்திற் கூறுபட்ட பல சங்கதிகள் இந்நூலில் ஒத்திருக்கின்றன. பாலிமொழியிலடங்கிக் கிடந்த மகாவம்சக் கதைகள் பல இந்நூலகத்தே இருக்கின்றன. மகாவம்சத்துடன் ஒத்துப்போகாத விடயங்களுமிருக்கின்றன. ஆகவே இந்நூல் மகாவம்சத்தைத் தழுவி எழுதப்பட்டதென்பதற்கு ஆதாரமில்லை. மகாவம்சத்திலுள்ள சரித்திரம் அறிந்தபின்ரே எழுதப்பட்டிருக்குமாயின் முன்பின் முரணின்றி முடிந்திருக்கும்.

விசயனும், அவன்தோழர்களும் தென்மதுரையிலிருந்து பெண்கள் பெற்றனரென்று மகாவம்சம் கூறுகின்றது. இந்நூலோ வடமதுரையிலிருந்து பெற்றதாக நவில்கின்றது.

மகாவம்சத்திற் கூறப்படும் பேரரசர்கள் பற்றியும் இந்நூல் எழுத்துரைக்கின்றிலது. பொல்லநறுவையில் ஆண்ட வேறு அரசர்களை எடுத்துரைக்கும் இந்நூலில் பராக்கிரமபாகுவைப்பற்றி ஒருவசனமுமில்லை.

ஆடகசவுந்தரியின் சரித்திரம் இந்நூலில் வேறோர் முறையிற் கூறப்பட்டிருக்கிறது. குளக்கோட்டன் கதை எதுவுமில்லை.

யாழ்ப்பாணப் பகுதியை இந்நூல் நாகதீபம், மணற்றி, மணற்றிடர், மணிபுரம் என்ற பல பண்டைப் பெயர்களால் விரித்துரைக்கின்றது.

இடப்பெயர் வரலாறுகளும் இந்நூலிற் காணப்படுகின்றன. பண்டை நூல்களில் இவ்வகை விபரம் காணுமாறில்லை.

காலவரையறை புரியாது அரசர்களை மாறுபடவுங் கூறியுண்டு.

இவ்வகைக் காரணங்களை மனதிற் கொண்டு ஆராயுமிடத்து இந்நூல் வேறோர் நூல்வழி வந்ததன்று என்பது புலனாகும். ஆகவே இந்நூல் மற்ற சரித்திர முதநூல்கள் போல் விளங்குகின்றது எனலாம்.

இந்த நூலில் பண்டைச்சரித்திரமும் உண்டு. ஒல்லாந்தர் வரையுள்ள இக்கால சரித்திரமுண்டு.

மகாவம்சம் கூறுவதுபோல் சிங்கத்தின் கதையைத் தழுவாது சிங்ககுல இளவரசன் வங்கதேசத்துப் பெண்ணைத் தூக்கிச்சென்ற மணமுடித்துப் பிள்ளைகள் பெற்றதாக இந்நூல் விரித்துரைக்கின்றது.

கலியுக ஆண்டுகளையே இந்நூல் கையாண்டு வந்திருக்கிறது. பழைய நூல்களிலேதான் இவ்வகை ஆண்டுமுறை கையாளப்படும்.

பண்டைக்காலத்தில் இலங்கை திரிசிங்கள நாடாகப் பிரிக்கப்பட்ட வரலாறு நவமான முறையிற் தரப்பட்டிருக்கிறது. எல்லாளனும் இவ்வகைப்பிரிவிற் பங்கு கொள்ளுகின்றான்.

இந்திய சரித்திரங்கூட இங்கு காட்டப்பட்டிருக்கின்றது. மகமது சூசினி என்பானின் நிர்ப்பாக்கியத்தால் முற்குகக் குடிகள் மூன்று படகுகளில் மட்டக்களப்பில் வந்து குடியேறினதாக எழுதப்பட்டிருக்கிறது.

இந்நூலின் வசனநடை, சொற்பிரயோகம் இவற்றை நோக்கும்போது பழைமைக்கும், புதுமைக்கும் இடனாக அமைகின்றது. வசனநடை பலபடியாக வளர்ந்து வந்திருக்கின்றது. கதை சொல்லுவது போல நீண்ட வசனங்களும், விளக்கிக் காட்டுவது போல் சிறு சிறு வசனங்களும் காணப்படுகின்றன. யாழ்ப்பாண வைபவமாலையின் வசனநடைவேறு, இதன் வசன நடைவேறு. வகுத்தும் தொகுத்தும் காட்டுவது போன்று நூல் நடந்து செல்கின்றது. சொற்பிரயோகங்களும் விசித்திரமானவை. இக்காலத்து வழங்கும் சங்கதச் சொற்களுமுள.

இவையெல்லாவற்றையும் நோக்குமிடத்து இந்நூல் யாரோ ஒருவரால் மாத்திரம் செய்யப்பட்ட தென்று துணிவதற்கில்லை. பல்லோராற் பற்பல காலங்களிற் செய்யப்பட்ட தென்பதே புலனாகின்றது.

இதனை எழுதியவர்கள் யாவரும் உண்மை வரலாறு அறிந்தவர்களாகவே தோற்றப்படுகின்றனர். பண்டைய வரலாறுகளில் அபிப்பிராயபேதம் இருப்பதால் அவைபற்றி உறுதியாக எதுவுஞ் சொல்லமுடியாது.

மாகோன் படையெடுத்து வந்து இலங்கையை வென்றமை யாவராலும் ஒப்புக் கொள்ளப்படுகின்றது. இவனின் சரித்திரம் ஆதியோடந்தமாக விரித்துரைக்கப்பட்டிருக்கின்றது.

இந்நூலும் யாழ்ப்பாண வைபவமாலை நவில்வது போல் ஒல்லாந்தரின் தூண்டுதலால் எழுதப்பட்டிருக்கலாமோ என்று நினைக்கவும் இடந்தருகின்றது.

பெரிய கல்வெட்டு, தாதன் கல்வெட்டு, போடி கல்வெட்டு இவையெல்லாம் அகவற்பாவாலானவை. இவையும் வரலாறு கூறுவன. வசனப்பகுதியிலுள்ள சில சம்பவங்கள் செய்யுள்; நடையிற் தரப்பட்டிருக்கின்றன. ஆகவே நூல்வசனமும், செய்யுளுமாகச் செய்யப்பட்டிருக்கிறது எனலாம்

——————————————–
* இங்கே கலி வருட ஆரம்பம் கி.மு 3102 என எடுத்துக்கொள்கின்றேன்.. மற்றும் இங்கே கூறப்படும் ஆண்டுக்கணக்கு சரியானதா எனவும் கூறமுடியாது…
——————————————–

மட்டக்களப்பு மான்மியம் கூறும் சில தகவல்கள்:
இந்த நூல் இராவணன் – குபேரன் காலத்திலிருந்து வரலாற்றைக் கூறத் தொடங்குகின்றது..
பின்பு மகாபாரதப் போர்முடிந்தபின் அத்தினாபுரத்து நாகர் கலி ஆண்டு  800 இல் ( கி.மு.2300 ) இலங்கை வந்ததாகவும்

குருகுலத்து
அன்றிய நாகர் கூடி அத்தி நாடதனால் மீண்டு
வன்றிற விலங்கை சேர்ந்து வாழ்ந்தனர் கலி எண்ணூறில்

பின்பு விஜயனும் தோழர்களும் இலங்கையை கலி ஆண்டு 2706 இல்  ( கி.மு 396 ) அடையும்போது அங்கே  நாகர் சிற்றரசன் முல்லைத்தீவிலிருந்து ஆண்டதாகவும் பின்பு விஜயன் குவேனி எனும் இயக்கர் பெண்ணை மணந்து
காளிசேனன் எனும் அரசனைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றியதாகவும் கூறுகின்றது…

——————————————–

இந்நூல் கூறும் சில வரலாற்றுக் காலங்கள்:
அத்தினாபுரத்து நாகர் இலங்கை வருகை  – கலி ஆண்டு 800 ( கி.மு.2300 )
விஜயனும் தோழர்களும் இலங்கை வருகை  – கலி ஆண்டு 2706 இல்  ( கி.மு 396 )
கலிங்க மாகன் – கலி ஆண்டு 4250 இல்  ( கி.பி 1148 )
கஜினி முகமது – கலி ஆண்டு 4115 அளவில் (கி.பி 1013 )

மகாவம்சத்திற்கும் மட்டக்களப்பு மான்மியத்திற்குமிடையில் பல கால வேறுபாடுகள் இருப்பினும் ஒரு புதிய விடயத்தைப் பார்ப்போம்.

பிரசன்னசித்து – சரித்திரம்:
பிரசன்ன சித்து கலிபிறந்து மூவாயிரத்து நூற்றுப்பத்தாம் வருஷம் மட்டக்களப்புக்கு அரசுக்கு வந்த போது தேவர் சந்நிதியியற்ற விருப்புடையவனாக இருந்து வரும் காலம் புவனேயகயவாகு என்னுமொரு கலிங்ககுமாரன் சோழநாட்டிலரசியற்றி வரும் திருச்சோழனுடைய மகள் தம்பதிநல்லாள் என்பவளைப் பாணிக்கிரகணஞ் செய்து சில காலத்தின் பின்பு புத்திரனில்லாமையால் இராமேசுபரம் தரிசனை செய்து மண்டபமொன்றியற்றும்படி திரவியமுங் கொடுத்து திட்டஞ் செய்து இலங்கையில் வந்து திருக்கேதீஸ்வரம் தரிசனை செய்து தானம் தன் மனைவியும் சிறைதளங்களோடு கோணேஸ்வரர் தரிசனை செய்து நிற்கும் போது மணிபுரத்தை அரசுபுரியும் நாகர்குலத்துச் சிற்றரசனுடைய மந்திரி கொட்டாயனென்பவன் புவநேயகவாகுவை நோக்கி என்னுடைய உத்தரவில்லாமல் நீயிங்கு வரப்படாதென விளம்பினன். அதனைக் கேட்ட புவனேயகயவாகுவும் தன்னோடு வந்து சோழவீரியர்களை ஏவிக் கொட்டியன் முதலிய நாகர் குலத்துப் பிரதானிகளையெல்லாம் வெட்டிக் கொன்று செயித்துச் சிலரை அந்நகரத்தாலகற்றியும் தெட்சணாபதியைத் தன்னளவிருத்திச் சோழநாட்டு வீரியர்களைக் காவல் வைத்து மட்டக்களப்பை அரசுபுரியும் வாகூரன் புத்திரன் பிரசன்னசித்துவிடத்தில் மனைவி துணைவரோடு வந்து குலமுகமன் கொண்டாடி ஆகாரமுண்டு பிரசன்னசித்துவிடத்தில் தெட்சணாபதியை ஒப்புக்கொடுத்துச் சில நாளிருந்து புவனேகயவாகுவும் தனது நகரம் போகக் கருத்துற்ற போது பிரசன்ன சித்துவும் நாகர்முனையில் பண்டு-நாளில் சுப்பிரமணியர் ஆலயம் பாழடைந்திருப்பதால் நாட்டுச் சிற்பிகளை அழைத்துச் செப்பனிட்டுத் தரும்படி வேண்டினன். அதனை உணர்ந்த புவனேயகயவாகுவும் தனது மாமன் திருச்சோழனுக்கு மட்டக்களப்பு நாகர்முனைச் சுப்பிரமணியர் ஆலையத்தைச் செப்பனிடக் கருத்துற்றேன். அதற்குச் சிற்பிகளும் திரவியங்களும் அனுப்பும்படி திருமுகம் அனுப்பினன். திருமுகத்தை வாசித்த திருச்சோழனும் சந்தோஷமடைந்து மருகன் கேட்டபடி அனுப்பினன். சிற்பிகள் வந்து புவனேயகயபாகுவைக் கண்டு நமஸ்காரம் செய்து ஆலயத்தைச் செப்பனிட்டு புவனேயகயபாகுவும் அந்தணர் புத்தியின்படி அபிசேகஞ் செய்து திருக்கோயிலென நாமஞ் சாற்றி பிரசின்ன சித்துவிடம் ஒப்புக்கொடுத்துச் சில நாளிருக்க புவனேயகயபாகுவின் மனைவி தம்பதி நல்லாளுக்குக் கெற்பமுண்டாக பிரசின்னசித்துவும் மனமகிழ்ச்சி கொண்டு புவனேயகயபாகுவுக்கு ஒரு நாடுண்டாக்கக் கருதி, வடக்கு மக்கனல் வெட்டுவாய்காலும், தெற்கு மாணிக்க கங்கையும், மேற்குக் கடவத்தையும் கிழக்குச் சமுத்திரமாயுமுள்ள ஒரு கிராமத்தை உண்டாக்கிக் கவடா மலையில் மாளிகை உண்டாக்கி புவனேயகயபாகுவுக்குக் கைலஞ்சமாகக் கொடுத்து அரசிருக்கச் செய்து புன்னரசி என்று நாமஞ்சாற்றிக் கல்லிலும் வெட்டிவைத்து தன்னிருப்பிடஞ் சென்றான். இது நிகழ்ந்தது கலிபிறந்து மூவாயிரத்து நூற்றுமுப்பதாம் வருஷம். அதன்பின்பு புவனேயகயவாகு தன்னோடு வந்த பிரதானி சோழவீரியர் சிறைத்தளங்களாகவும், தன்னரகாயிருத்தி தனது நகரத்துள் கழனிகள் திருத்தி குடிபடைசிறைகளை வைத்து வாழ்ந்து வருங்காலம் தனது மனைவிக்குப் பிரசவ காலம் நேரிட்டது. அன்று விடாமழை பெய்ய அத்தினத்தில் புத்திரன் பிறந்தான். அப்பிள்ளைக்கு மேகவர்ணன் என்றும் மனுநேயகயவாகு என்றும் நாமஞ்சாற்றி வாழ்ந்து வருங்காலம் புத்திரனுக்கு இராச பருவகாலம் வர வங்கதேசத்துக் குலசந்திரனுடைய புத்திரி அழகுவல்லியை மணம்முடிப்பித்து உன்னரசுகிரியையும் பட்டங் கட்டிச் சிலகாலத்தின் பின் புவனேகயவாகுவும் அவர் மனைவியும் ஒரே தினத்தில் தேகவியோகம் அடைந்தனர்.

மனுநேயகயவாகுவின் சரித்திரம்:
மனுநேயகவாகு கலிபிறந்து மூவாயிரத்து நூற்றைம்பதாம் வருஷம் பட்டத்துக்கு வந்தான். இவன் உன்னரசுகிரிக்கு மேற்கிலும் தெற்கிலும் உள்ள நாடு நகரங்களை எல்லாம் தன்கைவசப்படுத்தித் திசைவாங்க அரசுபுரியுங்காலம் மட்டக்களப்பை அரசுபுரியும் பிரசன்னசித்துவின் புத்திரன் நாசகனைச் சிநேகம் கொண்டு தந்தையாலியற்றிய நாகர்முனை ஆலயத்தை அந்தணர் புத்தியின்படி செப்பனிடக் கருதிச் சோழநாட்டுச் சிற்பிகளை அழைத்து ஏழுதட்டுத் தூபியும் மதில் மண்டபங்கள் மாதர்சாலை, வாகனவீடு, கோபுரவாசல், தங்கத் தகடு பூட்டிய கொடித்தம்பம் தூபியின் மேலே ஏழு தங்கக் குடமும் நிறைந்து ஆறுவீதியும் அலங்கரித்து அந்தணரால் அபிஷேகங்கள் செய்வித்துத் தனது மாதாபிதா வமிசத்தாருக்கு வங்கதேசம் சிங்கபுரம் சோழநாடு கலிங்கநாடு இராமநாடு இவைகளை அரசுபுரியும் புரவலர்களுக்குத் தந்தை தாயுடைய சம்பவங்களும் கலிங்கர் வங்கர் சிங்கர் இலங்கையை அரசுபுரியும் நேர்மைகளும், தனது தந்தையால் முன் நாகர் முனையிலியற்றிய திருப்பணிச் சம்பவங்களும் அந்தத் திருமுகப்பணியை யான் அந்தணர் புத்தியின்படி தமிழ் மதம் ஓங்கச் சோழ நாட்டுச் சிற்பிகளை அழைத்து செப்பனிட்டு அபிசேகம் இன்னதினமெனத் திருமுகம் அனுப்பினர். அதை வாசித்தறிந்து அரசர்கள் மாணிக்கம், முத்து, இரத்தினம், நாகமணி, தங்கத்தட்டு, பாரிசாதம், சரிகைப் பட்டு இவைகளை ஏழு இராசர் கையில் கொடுத்து தங்கள் தங்கள் பந்துக்கள் நாற்பது திறைக் குடிகளையும் அனுப்பிவிட்டனர். அவர்கள் ஒருங்கு சேர்ந்து ஒரு படகில் ஏறி தென்சமுத்திரம் சார்ந்து நாகர்முனைக்கு அடுக்காயிருக்கும் களப்பு முகத்திலிறங்கி நிற்க, தாசகன் மனுநேயகவாகுனின் பிரதானிகள் அந்தணர்களோடு எதிர் சென்று முகமன் கொண்டாட அந்தணர்களை ஏழு இராசரும் நாற்பது திறைக் குடிகளும் தம்பட்டனென வாழ்த்தித் திருப்பணிக்குச் சென்று ஏழு இராசரும் அவர் அவர்கள் கொண்டு வந்த திரவியங்களையும் அரசினர்தந் பதி நல்லாள் பந்துகள் கொடுத்த பத்திரங்களையும் மனுநேயகவாகுவிடம் கொடுத்து பரிசுபுரிந்தனர். மனுநேயகயவாகுவும் வந்தவர்களை ஆசீர்வதித்து அறுசுவையுடன் அமுதளிப்பித்து அபிசேகஞ் செய்து ஆறுகாலம் பூசை நடக்கும்படி ஏழு இராசர்களையும் படையாட்சி குலத்தில் மூன்று வன்னியர்களையும் வகுத்து இருபாகை முதன்மையாக கலிங்ககுலத்து பிரசன்னசித்துவினுடைய சந்ததிகளே வரவேண்டுமென்றும், ஐந்து பண்டாரங்களும், அந்தணர். முதன்மை இராசர் இவர்களுடைய உள்ளியர் என்றும் பதினாறு சிறைகளும் காராளருடைய உள்ளியர் என்றும் மனுநேயகயவாகுவும் தாசகனும் கற்பித்தனன். பின்பு திருப்பணிக்கு ஆதாரமாக மனுநேயகவாகுவும் தாசகனும் ஏரிகள் இயற்றிக் கழனிகள் உண்டாக்கக் கருதி சங்குமண்கண்டு தலையாகவும் தாடைகிரிபாதமாகவும் இருபத்துநாலு ஏரி ஒன்றாகவும் முப்பத்திரண்டு மதகுவைத்து ஒரு ஏரி இயற்றி சமுத்திரக் கரைவரை கழனிகள் திருத்தி நீர் மிஞ்சிவந்தால் ஏரியை இரண்டாகப் பிரித்து நடுவில் கள்ளி ஓடையாய் வெட்டிச் சமுத்திரக் கரையில் கொண்டுவிட்டு நாகமுனைக்குத் திருப்பணிக்கு ஈந்து மட்டக்களப்பை அரசுபுரியும் தாசனிடத்து ஒப்புக்கொடுத்து இராசரும் வந்த திறைக் குடிகளும் தம்பட்டர் என்று அந்தணர்களைக் கண்டு பேசிய இடத்தில் அந்தணர்களைக் குடியிருத்தி பட்டையும் வரிசைகளையும் கொடுத்து மாணிக்க வைரத்தால் ஒரு கணேசவிக்கிரகமும் ஸ்தாபித்து தம்பட்டார் ஊரென நாமம் சூட்டி, தனதுமாதா தம்பதி நல்லாள் பேரில் ஒரு வாவியும் இயற்றி அந்த வாவிக்குத் தம்பதிவில் என்று நாமம் சாற்றி தாசகனிடத்து விருந்துண்டு முகமன் கொண்டாடி உன்னரசுகிரிவில் மனைவியும் வரும்சிறைத் தளங்களோடு சென்று வாழ்ந்துவரும் காலம் மனைவிக்கு சந்தானமில்லாமையால் விசனமுற்று இருக்கும்போது ஒரு பேழை சமுத்திரத்தில் அடைந்துவந்து கரை ஏறக்கண்ட வேவுகாரன் ஒருவன் உன்னரசுகிரியில் சென்று மனுநேயகயவாகுவிடத்தில் கைகட்டி நின்று. அரசே சமுத்திரக்கரையில் ஒரு அழகுசவுந்திரியமான பேழை அடைந்து கரைசேர்ந்திருக்கிறதென விண்ணப்பம் செய்தான். அதைக்கேட்ட அரசன் பிரதானிகளோடு கடற்கரைக்குச் சென்று பேழையைத் திறந்தான். அதற்குள் ஒருபெண் குழந்தையிருந்து கல கல என நகைத்தது. அதைக் கண்ட அரசன் மனமகிழ்ச்சியோடு பல்லக்கில் வைத்து உன்னரசுகிரிக்குச் சென்று தன் மனைவி கையில் கொடுத்து ஆடகசவுந்திரி என நாமம் சூட்டி நாளொருவண்ணமாய் வளர்த்துப் பேழை அடைந்த இடத்தை நகராக்கி பாலர்நகை நாடென நாமம் சாற்றிக் குடியேற்றி அந்தநாடும் மட்டக்களப்பு எல்லையான படியால் தாசகனிடத்தில் ஒப்புக்கொடுத்துத் தனது நகரம் போயினன். தாசகனும் அந்தப் பாலர் நகரைக் காட்டில் படகுகட்டும் துறையாக்கி அணையும் இயற்றினன். அதன்பின் வடநாட்டு வர்த்தகர்கள் வந்து வர்த்தகம் செய்தனர். பின்பு மனநேயகயவாகுவின் மந்திரி ஆடகசவுந்தரிக்கு ஏழுவயதில் சயனிக்கும் போது ஒருவர் தெரிசனபிரசன்னராகி இராமமந்திரம் ஒன்றும், இராமதியானமே வணக்கமொன்றும், உபதேசித்தகன்றார். உடனே விழித்து மறுநாட்காலையில் மந்திரஞ் செபித்து இராம மூர்த்தியை வணங்கி வருங்காலம் மனுனேயகயவாவுக்கு ஆடகசவுந்தரியினுடைய பூர்வ சம்பவங்களை வடநாட்டு வர்த்தகப் பிரபுக்கள் விளங்கப்படுத்தினர். மனுனேயகயவாகுவும் புத்திரிதனக்கு உரிமை உடையவளென்றும் உன்னரசுகிரியைப் பட்டங்கட்டி பரமபதம் அடைந்தனன்.

——————————————–

மேலும் இரு கயவாகு:
இதில் கூறப்படும் இரு கயவாகு புவநேய கயவாகு , மனுநேய கயவாகு. அதைப்பற்றி விரிவாகப் பார்ப்போம்..

புவனேயகயவாகு – கலி 3130  (கி.பி.28)
கலிங்கத்தைச் சேர்ந்தவன் – சோழ மன்னன் திருச்சோழனின் மகள் தம்பதி நல்லாளை மணம் முடித்துப் பின் இலங்கை வந்தான்.

மனுநேயகயவாகு என்னும் மேகவர்ணன்  – கலி 3150  (கி.பி.48)
புவனேயகயவாகுவின் மகன் – பேழையில் வந்த குழந்தைக்கு ஆடகசவுந்தரி எனப் பெயரிட்டு வளர்த்து வந்தான்.

ஆடகசவுந்தரி கதை:
ஆடகசவுந்தரி வரலாறு புராணத்தன்மை நிரம்பியதாகக் காணப்படுகின்றது .. கலி 3180 – 3370 (190 ஆண்டுகள்) அளவில் ஆடகசவுந்தரி வாழ்ந்ததாகக் கூறுகின்றது… மகாவம்சம் கூறும் மகாசேனனை( கி.பி 325 – 352) மணந்து அரசாண்டதாகக் கூறும் இந்நூல் மகாசேனன் சைவ ஆலயங்களைத் திருத்தியதாகக் கூறுகின்றது. மகாவம்சம், அவன் சைவ ஆலயங்களை இடித்ததாகக் கூறுகின்றது.

சங்கமிகிந்து ( சங்கமித்திரர் ?? ) வைதூலிக சைவமதத்தை வளரச்செய்ய விரும்பியதாக மட்டக்களப்பு மான்மியம் கூறுகின்றது.. மேலும் அவர் அனுராதபுர மன்னனின் சகோதரன் எனக் கூறுகின்றது.. தேரவாத மற்றும் மகாயான பௌத்த பிரிவுக்கிடையில் நடந்த பூசல்களையே அது சைவ – பௌத்த பூசல்களாகக் கூறுகின்றது எனக் கருத இடமுண்டு. இருப்பினும் வைதூலிக மதம் என்பது மகாயான பௌத்தமாக இருக்கலாம் ..

ஆடகசவுந்தரியின் பிற்கால வரலாறு மகாசேனன் காலத்தோடு ஓரளவு ஒத்துப்போகின்றது. ஆயினும் ஆடகசவுந்தரியின் மிகநீண்ட வாழ்க்கைக்காலம், மனுநேயகயவாகுவின் காலத்திற்குப் பின்னாலான தெளிவற்ற வரலாற்றால் மனுநேயகயவாகுவின் மகளையும் ஆடகசவுந்தரியையும் இணைத்துக் கூறப்பட்டதாகக் கருதலாம்.. அல்லது இருவரது பெயரும் ஒன்றாக இருந்து ஒருவராகக் கருதி வரலாறு மாற்றப்பட்டதாகவும் கருதலாம்..

கண்ணகி – கோவலன் கதை சிலப்பதிகாரம் தவிர நாட்டார் பாடல்களாகவும் வழங்கிவந்துள்ளன. அவற்றுள் கோவிலன் கதை, கண்ணகி வழக்குரை மற்றும் சிலம்பு கூறல் என்பன குறிப்பிடத்தக்கவை… அவை கண்ணகியை பாண்டிய மன்னனின் மகள் என்றும் சோதிடர் சொன்னதைக்கேட்டு பாண்டியன் குழந்தையைப் பேழையில் ஆற்றில் விட்டதாகவும் கூறும்.

பத்தினி வழிபாடு எனும் நூலில் சி. கணபதிப்பிள்ளை பின்வருமாறு கூறுகின்றார். (இதற்கான ஆதாரங்கள் என்னவென்று தெரியவில்லை)

சந்தன மரத்தால் செய்த கண்ணகி உருவமும் ஒரு சிலம்பும் சந்தன மரப்பலகையால் செய்த பேழையில் வைத்துக் கயவாகுக்குச் செங்குட்டுவன் கொடுத்தான். பாண்டிய அரசன் வெற்றிவேற்செழியன் யானைமேல் சந்தனப் பலகையாற் செய்த பெட்டியையும் அரசனையும் ஏற்றி வேதாரணியத்தில் கொண்டுவந்து விட்டான் . அங்கிருந்து கப்பலில் காரைதீவுக்கும் கீரிமலைக்குமிடையிலுள்ள திருவடிநிலையில் இறங்கினார்கள்.

(இதையும் பாருங்கள் – அகநானூறு
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளங்கெழு முசிறி ஆர்ப்பெழ வளைஇ
அருஞ்சமங் கடந்து படிமம் வவ்விய
நெடுநல் யானை அடுபோர்ச் செழியன்

கொடிநுடங்கு மறுகில் கூடல் குடாஅது – எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்)

(சிலம்பு கூறல் காவியத்தில் கண்ணகியின் காற்சிலம்புக்கு மாணிக்கம் எடுக்க இலங்கை வந்ததாக ஒரு கதை உண்டு.. வேறொரு இழையில் அதனைப் பார்ப்போம்)

——————————————–

எனது கருதுகோள்:
இங்கே கூறப்படும் மனுநேயகயவாகு, சிலப்பதிகாரம் கூறும் கயவாகுவாக இருக்கலாம்..
இலங்கைக்குக் கண்ணகி வழிபாடு வந்ததை ஆடகசவுந்தரி ஆற்றில் பேழையில் வந்ததாகக் கூறப்பட்டிருக்கலாம்..

புவனேயகயவாகு சோழ மன்னன் திருச்சோழனின் மகள் தம்பதி நல்லாளை மணந்ததாகக் கூறப்படுவதால் திகழ் ஒளி ஞாயிற்றுச் சோழன் மகள் ஈன்ற மைந்தன் செங்குட்டுவனுக்கும் மனுநேயகயவாகுக்கும் உறவுமுறை இருக்கலாம். அதனால் மனுநேயகயவாகு பத்தினிக் கடவுள் விழாவுக்குச் சென்றிருக்கலாம்.

சிங்கள, தமிழ் வரலாற்று நூல்களை மற்றும் ஏனைய சான்றுகளை ஒன்றிணைத்து ஒரு ஆராய்ச்சி செய்தால், மேலும் பல விடயங்களை அறியக்கூடும்.. வரலாற்றறிஞர்கள் இதுபற்றி மேலும் ஆராயவேண்டும்..

நன்றி,
முகுந்தன்

______________________________________________________
முகுந்தன்
mukunthan@gmail.com
______________________________________________________

You may also like

Leave a Comment