Home article கடலோடிகளின் கதை

கடலோடிகளின் கதை

by Themozhi
0 comment

கடலோடிகளின் கதை

——   கே.ஆர்.ஏ. நரசய்யா.

சென்றவருடத்தின் பிற்பகுதியில் நான் கனடா சென்றிருந்தேன். அங்குள்ள தமிழ்ச் சங்கம் கூட்டிய ஒரு அமர்வில் அங்கு வாழ் இலங்கைத் தமிழர்களைச் சந்திக்க நேர்ந்தது. எங்கேயோ பிறந்து உலகமெல்லாம் ஓடிக் களைத்து, இருக்க இடமின்றி தவித்து வந்த பலருக்கு புகலிடமளித்து வரவேற்றது கனடா. அங்கு சேர்ந்தபிறகு இத்தனை இடர்கள் பட்டிருப்பினும் சிறிதும் தமிழையோ தமது உன்னத மதத்தையோ கலாச்சாரத்தையோ மறவாது போற்றும் இவர்களது மனநிலை கண்டு வியந்தேன். அதிலும் சாதாரண மனிதர்கள் அங்கு சென்று, தமது வழித்தடங்களை மறக்காது, தமது பின்புலங்களைச் சரிவர நினைவு கூறும் ஆற்றல் கண்டும் அகமகிழ்ந்தேன். ஆகையால் ஒரு எளிய இலங்கைத் தமிழரான, பொன்னம்பலம் சிவகுமாரன் என்ற ஒரு இளைஞர், தொழிலால் கடலோடி, தம்மால் முயன்ற மட்டும் உழைத்து எனக்கு அனுப்பி வைத்த “வல்வெட்டித் துறைக் கடலோடிகள்” என்ற ஒரு அழகான நூல் எனது கவனத்தை முற்றிலுமாக ஈர்த்தது.  அழகான என்று கூறுகையில், அதன் வடிவ அமைப்பையும் தன்னுள் கொண்டிருக்கும் பொருளையும் சேர்ந்து தான் கூறுகிறேன். இவ்வளவு சிறப்பாக நூல் அமைக்கப்படுவது கனடாவின் தொழில் நுட்பத் திறனாலும், அங்கு வாழ் இலங்கைத் தமிழரின் முயற்சியாலும் தான்.

வல்வெட்டித்துறை கடலோடிகள்
ஆசிரியர்: செல்வராசகோபால், க. தா.
வெளியீடு: 2011
வெளியீட்டாளர்: விஷ்ணுசுந்தரம் நினைவு வெளியீட்டு நிதியம்
http://www.noolaham.org/wiki/index.php/வல்வெட்டித்துறை_கடலோடிகள்

இந்நூல் முதன் முதலாக விருத்த வடிவில் ஆக்கப்பட்டது கலாநிதி க. தா. செல்வராசகோபால் என்ற ஈழத்துப்பூராடனார் என்பவரால்.  அதைச் சேகரித்துக் கொடுத்தவர் அருள் சுந்தரம் விஷ்ணுசுந்தரம் என்பவர். அதை ஒரு புத்தக வடிவில் தொகுத்தவர் பொன்னம்பலம் சிவகுமாரன்.

இந்நூலில் முக்கியமாக என்னைக் கவர்ந்தது “அன்னபூரணி”  என்ற கப்பலின் கதை சொல்லப்பட்டிருக்கும் எளிய ஆனால், தவறில்லாத முறை. இது ஒரு பாய்மரக் கப்பல். கட்டப்பட்டது இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வல்வெட்டித்துறை என்னும் இலங்கைத் துறைமுகத்தில் தமிழர்களால்.

இந்நூல் தொகுப்பதில் அதிக சிரத்தை காட்டப்பட்டுள்ளது. முக்கியமாக, வல்வெட்டித்துறையின் வரலாற்றை ஆய்வு செய்தவர்கள் நூல்களிலிருந்து மேற்கோள்கள் தரப்பட்டுள்ளன. அவர்கள் வித்துவான் வ. மு. கனகசுந்தரம், பூ. க. முத்துக்குமாரசுவாமி, செ. வைத்திலிங்கம் பிள்ளை, இ. கே. ராஜகோபால், ஆதிகோயிலடி ஜெயம் (ந. சிவரெத்தினம்), வல்வை ந. நகுல சிந்தாமணி மற்றும் பா. மீனாட்சி சுந்தரனார்.

இந்நூல் ஆரம்பமே நம்மை வியக்க வைக்கிறது. துரதிருஷ்டவசமாக இது போல தமிழ் நாட்டில் ஒரு நூலும் கிடையாது. எழுதப்பட்டாலும் அதற்கு எவ்வாறு வரவேற்பு இருக்குமெனச் சொல்ல இயலாது.

ஆரம்பத்திலேயே பெயருக்கான காரணம் விளக்கப்படுகிறது:
”தனத்திரு தானியந் தைரியம் தகைசுகம்
தந்திடும் தகவாம் தயவுடன்
மனம்நிறை மாமதி மாண்புறு அறிவுடை
மட்டறு கல்வியும் வீரமும் மதிப்பதும்
அனைத்துல காளுமை ஆட்சியாம் அருளவை
ஆகிட அருளென் றங்கரம் இணைத்துனை
தினந்தினம் வேண்டிலென் தேவிகாள் திருவருட்
திகழ்வுறு பாக்கியம் தேடினேன் தருகவே.

என அட்டலெட்சுமி அம்மாள் அலங்காரம் என்ற நூலில் ஒரு பா உண்டு. இதனில் சொல்லப்பட்ட எட்டுச் (அட்ட) செல்வங்களையும் “வடமொழியில் தனம், தானியம், தைரியம், சௌரியம், வித்தியா, ஜெயம், மகிமை, ராஜ்யம் என்பர்” என்ற சொற்றொடர்களுடன் முதலாகும். ஒரு கப்பல் நாட்டிற்குச் செல்வம் கொண்டு வரும் என்பதைத் திறம் பட வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

இந்நூலைத் தமிழகம் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை! அரசு நூலகங்களில் வைக்கப்படவேண்டிய நூலெனத் திட்டமாக என்னால் கூற இயலும்.

முதலில் நூலின் அமைப்பைப் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். சிறந்த முறையில் படங்களுடனும் விளக்கங்களுடனும் அழகான ஆர்ட் தாட்களில் கையில் எடுக்கும் போதே ஒரு விதமான இறையுணர்வை ஏற்படுத்துகிறது. இத்தனை வருடங்களில் நான் படித்த கடல், கப்பல் பற்றிய தமிழ் நூல்களில் எவையும் இதன் ஒரு சிறு பகுதிக்குக் கூட சமானமாகாது என்பது என் கணிப்பு.

இந்நூலின் ஒரு பகுதியாக, விருத்த வடிவில் அன்னபூரணி அம்மாளின் ஆழ்கடல் பயண வரலாற்று நிகழ்வின் இலக்கிய ஓவியம் என்ற பெயரில், 30 பக்கங்களில் வல்வெட்டித்துறைக் கடலோடிகளால் 1937 – 38 ல் செலுத்தப்பட்டு அமெரிக்க மாசசூசெட்ஸ் மாநில குளோசெஸ்டர் துறைமுகத்தைச் சென்றடைந்த என்ற தொடக்கத்துடன் அழகாக ஈழத்துப் பூராடனார் வடித்துள்ளது தரப்பட்டுள்ளது. விவேகானந்தர் படத்துடன் ஆரம்பமாகும் அவ்விருத்தம் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் இந்தியனைத் தலை நிமிர்ந்து நிற்கச்செய்யும்.
விவேகானந்தரைப் பற்றிச் சொல்லுகையில்,
”நிமிர் நெஞ்சு சீருடையில் நிலவென்னதலைப்பாகை
நெடுமுயரம் நீள்மேனி. நிலைத்த சிலை தனை நிகர்த்து,
அமிர்தமென ஆங்கிலத்தில் அங்கு இடம் பெற்றதொரு
அனைத்துலக மத ஆய்வு அவை தனிலே ஏறி நின்று
திமிரழத்த ஞானியவர் திருக்கரந் தனைக் குவித்து,
திரண்டிருந்த மக்கள்தமை தெய்வீகச் சகோதரரே
தமிழொத்த சகோதரிகாள் தானென்று விழித்துரைக்க
தாரணியோர் அரண்டு விட்டார் தருவார்த்தை என்றுரைத்தார். .”
இது போல இந்தியத் தமிழர் எவரும் எழுதவில்லையே என்று என் மனம் ஏங்கிற்று!

சிறந்த முறையில் பயணத்தின் தொடர்ச்சியை 28 பகுதிகளாக விருத்த வடிவில் தந்துள்ளார், ஈழத்துப் பூராடனார்.

எனது கவனத்தை மிகுவாக ஈர்த்தது புலம் பெயர்ந்து குலம் வளர்த்த வல்வெட்டித்துறைக் கடலோடிகள் என்ற பகுதி இதை ஒரு தனித்த ஆய்வெனவே கொள்ளலாம். பல உண்மைகள் மிக எளிதாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.

அன்னபூரணியின் அமெரிக்க வருகை ‘பாஸ்டன் க்ளோப்’ என்ற பத்திரிகையில் 1938 ஆகஸ்ட் 2 அன்று விரிவாக ஆங்கிலத்தில் தரப்பட்டிருந்ததை இங்கே சேர்த்திருப்பது நூலின் மதிப்பை நன்கு உயர்த்துகிறது. இம்மாதிரி ஆவணங்களுடன் சொற்ப நூல்களே தமிழகத்தில் காணலாம்.

அப்பத்திரிகை, ஜோசப் கோன்ராட் என்ற சிறந்த கப்பல் பற்றிக் கதைகள் எழுதிப் பிரபலமடைந்த எழுதிய நாவலொன்றைப் படிப்பது போல உள்ளது இக்கப்பலின் நீண்ட பயணமும் வருகையும் என்றே குறிப்பிடுகிறது. ஏனெனில் இது (அன்னபூரணி) ஒரு பாய்மரக் கப்பல். அமெரிக்கர்களுக்கு  அவ்வருகை ஒரு கண்கொள்ளாக் காட்சியாக இருந்திருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை எனலாம்.

1937 பிப்ரவரி 27 ஆம் நாள் வல்வெட்டித்துறையினின்றும் புறப்பட்ட இக்கப்பல், ஆகஸ்டு 1, 1938 அன்று மசாசூசெட்ஸ் மாநிலத்தின் குளோசெஸ்டர் துறைமுகத்தையடைந்தது ஒரு பெரும் பணிதான்.

அத்துறைமுகத்தைச் சென்றடைந்தபோது மாலுமிகள் தமது வந்தனங்களை ஆண்டவனுக்குச் செலுத்திவிட்டு, நெற்றி நிறைய விபூதியுடன் நின்ற காட்சியை ஆங்கிலத்தில் பாஸ்டன் க்ளோப் இவ்வாறு விவரிக்கிறது:

The Sacred Ash
Some of the Hindus sported a yellow dab on the forehead. The inquirer was informed that the dab was called the ‘sacred ash’ and its presence brought their God, Siva, closer to them. Siva knew all personally who wore that mark, they said. A spot on the forehead is whitewashed and then powdered and the dab stuck on that spot.  The Hindus who belong to a high caste in Ceylon held their weekly worship on Friday night, their Sunday, by the way.

சொல்லப் போனால், இது ஒரு சாதாரண நூலல்ல; இதன் மகிமை என் போன்ற கடலோடிகளுக்கு முக்கியமாகத் தென்படும். எவ்வளவு தான் படித்துத் தெரிந்து கொண்டாலும், அவ்வுணர்வு கடலில் கப்பலில் சென்றவர்களுக்குத் தான் தெரியும். இவர்கள் தான் உண்மையான தேசபக்தர்கள். நாட்டின் தூதுவர்கள். உழைப்பினாலும், தளராத முயற்சியாலும் உயர்ந்தவர்கள்.நூலைப் படித்து முடிக்கையில் ஏதோ ஒரு சக்தி நம்மையே பிடித்து ஆட்டுவது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

நூலாக்கியவர்களைச் சிரம் தாழ்த்தி வாழ்த்துவதைத் தவிர என்ன செய்ய இயலும்? முக்கியமாக நண்பர், சக கடலோடி, பொன்னம்பலம் சிவகுமார் போற்றுதலுக்குரியவர்.

________________________________________________________________________
தொடர்பு:  கே.ஆர்.ஏ. நரசய்யா (narasiah267@gmail.com)

You may also like

Leave a Comment