Home article இலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 4

இலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 4

by Administrator
0 comment

– நாள் 4 –

நான்காம் நாள் அதிகாலையிலேயே தோழர் விருந்தோம்பலில் பிட்டும் சாம்பாரும் உண்டுவிட்டு வவுனியாவிலிருந்து அனுராதபுரம் புறப்பட்டு விட்டோம். காலை பத்து மணி சுமாருக்கு அனுராதபுரம் வந்தடைந்தோம். அனுராதபுரத்தில் ஒரு நாள் மட்டுமே இருந்த படியால் விரைவாகச் செயல்பட வேண்டியிருந்தது.

முதலில் நாங்கள் சென்றது பழைய அனுராதபுரம் இடிபாடுகள். தொலுவில என்ற இடத்தில் அமைந்த ’ஜேதவான விகாரை’ ஒன்றின் மிகவும் விஸ்தாரமான கட்டுமானக்கூட்டம். இது ஒரு காலத்தில் ’ஆராமமாக’ (விகாரைத்தோட்டம்) இருந்திருக்கலாம் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்(1).

பசும்புல்லோடிய தரைகளில் ஆடித்திரிந்த மயில்களுக்கு மத்தியில் ஆங்காங்கு வெளித்தெரிந்தன ஐம்பதிற்கும் மேற்பட்ட சிறு கட்டிடங்களின் அடித்தளங்கள். வடக்கேயும், தெற்கேயும் இரண்டு சற்றே பெரிய கட்டுமானங்கள். வட திசையிலிருந்த கட்டுமானம் ’போதிகர’ (வெள்ளரசு வீடு) ஆக இருந்திருக்கலாம் என்று கருத இடமுண்டு.

தென் திசையில் இருப்பது புத்த உருவம் தாங்கியதாக இருந்திருக்க வேண்டும், சற்றே உயர்ந்த மாடத்தில் சிலாரூபத்துக்கான இடத்தோடு இருக்கிறது இது. இங்கே கண்டெடுக்கப்பட்ட சுமார் ஐந்தரை அடி உயரப் புத்தர் சிலை தான் அனுராதபுரத்தில் கிடைத்தவற்றிலேயே அழகானதென்று சொல்கிறார்கள்.

மூல விக்ரகத்தின் அடியிலிருந்து ஒரு சிறிய வெண்கலச்சிலையும் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது(2) . அது தற்போது கொழும்பு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. அங்கே படித்தளத்தில் ஒரு கல்வெட்டும் நம் கண்ணில் பட்டது. யாம் சுற்றி வருகையில் அருகிலேயே 25குழி கொண்ட கல்பாத்திரமும் (கல்களன்) காணக்கிடைத்தது. மூல விக்ரகத்தின் அடியில் இத்தகைய கல்பாத்திரங்களில், திசை சார்ந்த ‘மங்கல’ பொருட்கள் வைத்து மூடி அதன் மீது சிலையைப் பிரதிஷ்டை செய்வது இன்றும் பௌத்தம் மட்டுமல்லாமல் வேத ஆகமக் கோயில்களிலும் கடைபிடிக்கப்படும் ஒரு சடங்கென்பதை நாம் அறிவோம்.

இதே போன்ற சூலம், மணிகள், பாதுகை மாதிரி- என்று பௌத்த நெறிப்படியான மங்கலப்பொருட்கள் வைக்கப்பட்ட கல்பாத்திரத்தை மலேசியாவின் மிகச்சிறந்த தொல்லியல் களமான ’லெம்பா புஜாங்’ அகழாய்வகத்தில் கண்ட நினைவு வந்தது.

தொலுவிலவில் இருந்து கிளம்பி அனுராதபுர வளாகத்துள் நுழைந்தோம். அரை நாளில் பார்த்து முடிக்கமுடியாது என்று உணர்ந்து வருந்தினோம். குறைந்தபட்சமாக ’மகாபோதி’யாவது பார்த்துவிட்டுப் போகலாம் என்று அங்கே சென்றோம்.

அருகிலேயே மரத்துக்கடியில் மிக ரம்மியமான சூழலில் ஒரு தூபியின் இடிபாடு காணக்கிடைக்க முதலில் அங்கே சென்றோம். அது சிலாசேதிய / குஜ்ஜ திஸ்ஸ என்ற தூபி என்று அறிந்தோம். அனுராதபுரத்தின் மிகப்பழமையான கட்டுமானங்களுள் ஒன்று அங்கே புதைந்திருக்கலாம் என்று தெரிந்தது. தற்போது இடிபாடாய்க் காணக்கிடைக்கும் அத்தூபி 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இது அதற்கும் முந்தைய கட்டுமானத்தின் மீது எழுப்பப்பட்டிருக்கிறது என்பது அறிஞர் துணிபு(3).

பொ.மு. 119-109 காலத்துக் கதைகள் சில இதற்குச்சொல்லப்படுகின்றன. சத்தாதிஸ்ஸன் என்ற மன்னன் ஆட்சிக்காலத்தில் குஜ்ஜதிஸ்ஸன் என்ற சக்திவாய்ந்த தேரோ ஆகாய மார்க்கமாக இங்கே வந்திறங்கினார் என்ற கதை ஒன்று. புத்தர் தன் இலங்கை வருகையின் போது இந்த இடத்திலே தன் பாதம் பதித்தார் என்பது மற்றொரு கதை.

ஆனால் இவ்விரண்டும் தவிர்த்து இன்னொரு சுவாரஸ்யமான கதையும் உண்டு. இந்தத் தூபி இருக்கும் இடம் கோட்டைக்குச் செல்லும் பழமையான பாதையின் அருகே என்பதால், துட்டகாமினியோடு போரிட்டு மாண்ட தமிழ் அரசன் எல்லாளனுக்காக துட்டகாமினி கட்டிய தூபியாக இது இருக்கலாம் என்பது தான் அந்தக் கதை. ஆனால் இது கர்ண பரம்பரைக் கதையல்ல அறிஞர்களின் தர்க்கரீதியான கருத்து. ஆயினும் இது எல்லாளனின் கல்லறை அல்ல என்றும் மன்னர் மாளிகைக்கு அருகே அகழிக்கு அப்பால் உள்ள தக்கணத்தூபியே எல்லாளன் கல்லறை என்ற மாற்றுக்கருத்தும் உண்டு.

ஒரு பௌத்த மன்னன் தன் எதிரியே ஆனாலும் தன்னால் போரில் வீழ்த்தப்பட்டவன் எரியூட்டப்பட்ட இடத்தில் அவனுக்கொரு தூபி எழுப்பியிருக்கிறான் என்றால் அந்த இரு மன்னர்களின் மாண்பையும் சிலாகிக்காமல் இருக்க முடியவில்லை. இந்த எல்லாளனைத்தான் நமது மனுநீதிச் சோழன் என்கிறார்கள். இது சாத்தியமா என்பது கேள்விக்குறி. மனுநீதிச்சோழனைப்போலவே பசுவின் கன்றுக்காகத் தன் மகனைத் தேர்க்காலில் இட்ட கதையை இவன் மீது சூட்டுகிறது மகாவம்சம். இவன் சோழ வம்சத்தினன் என்றும் இவன் தவறான மதநம்பிக்கை கொண்டவனாயினும் (அதாவது பௌத்தம் பின்பற்றாதவன் என்ற கருத்து) நீதி வழுவாத உத்தம ஆட்சி செய்தவன் என்றும் கூறுகிறது மகாவம்சம்.

அந்த இடத்தில் வேறெங்கும் இல்லாத ஒரு அசாத்தியமான நிம்மதி மிகுந்த அதிர்வலை சூழ்வதை அங்கு இருந்த யாவருமே உணர்ந்தோம் என்பதை இங்கே நினைவு கூர வேண்டியிருக்கிறது. நாங்கள் சென்ற சமயத்தில் அங்கே இளம் தேரிகள் சிலர் தாமரை இதழ்களை அள்ளித்தெளித்து மதுரமாய் பாளியில் மந்திரங்கள் சொல்லிக் கொண்டிருந்தபடியால் சூழல் இன்னும் நிர்மலமாக இருக்கவே அங்கேயே ஐந்து நிமிடம் அமர்ந்திருந்தோம். பின்னரும் அகல மனமில்லாமல் விலகி, அங்கிருந்து மகாபோதி வளாகத்துள் நுழைந்தோம்.

பொ.மு. 250இல் புத்தரின் கோட்பாடுகளை உலகுக்கு உரைக்கும் உன்னதப்பணியில் அசோகனின் மகன் மகா தேரோ மஹிந்தன் வந்து வழிநடத்தியபின் பௌத்தம் தழுவியவன் தேவனாம்ப்ய திஸ்ஸன். (தேவநம்பியதீசன்)

அவன் கேட்டுக் கொண்டதற்கிணங்க அசோகரின் மகள் மகா தேரி சங்கமித்ரை போதி மரக்கிளையோடும் (வெள்ளரசு), சடங்கு சம்பிரதாயங்களுக்குத் தேவையான சகல பரிவாரங்களோடும் (மரத்துக்கு நீரூற்றத் தூய்மையான நீர்மகளிர் முதற்கொண்டு) இங்கே வந்து சேர்கிறார்(4). தேவனாம்ப்ய திஸ்ஸனிடம் அவர்கள் மரியாதையாக அளித்த அந்த போதிக்கன்று இன்று வேர் விட்டு பெருவிருட்சமாய் பரவிக் கிடக்கிறது.

புத்த கயாவின் போதி மரத்துக்குத் தீமை நேர்ந்து அழிவுற்றபோதெல்லாம் இங்கிருந்து தான் கிளை கொண்டு செல்லப்பட்டது என்ற தகவலை எழுத்தாளர் தோழர் கவுதம சன்னா அவர்கள் சொன்னபோது வியப்பாக இருந்தது.

பொ.மு. 249இல் முதன் முதலாக நடப்பட்டுத் தொடர்ந்து அரசாலும் மக்களாலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது இந்தப்போதி மரம். இன்றளவும் போதியோடியைந்த சடங்குகள் யாவும் பழமையின் வழமை மாறாமல் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. அதைக் கண்ணாரக்கண்டுவிடலாமென்று அருகே போனோம்.

உயர்ந்த மாடத்தின் மீது நின்ற அந்தப்பெருமரத்தின் அருகே பெருந்திரளான கூட்டம் இருந்த போதிலும் தள்ளுமுள்ளு இல்லை இரைச்சல் இல்லை. அமைதியாக அவரவர் போதிமரத்தின் நிழலில் கண்மூடி அமர்ந்து தமக்குள் புத்தரைத் தேடிக்கொண்டிருந்தனர். யாமும் அப்படியே ஐந்து நிமிடம் அமர்ந்து அந்த அகண்ட மவுனத்தைக் கொஞ்சம் உள்ளிழுத்துக் கொண்டபின் கீழே வந்தோம்.

போதிமரத்தின் பின்னணியில் இலங்கையில் பௌத்தம் பற்றி எழுத்தாளர் திரு கவுதம சன்னா அவர்கள் விவரிக்க தமிழ் மரபு அறக்கட்டளை சார்பில் ஒரு காணொளி ஆவணமும் எடுக்கப்பட்டது. போதிகரத்தை விட்டு வெளியேறி நடக்கையில் அதன் வளாகத்திலிருந்த சட்டசாலை, லோகபசாதா, ரம்ஸி மாலகா, பனம்பமாலகா என்று இடிபாடுகள் தெரிந்தன.

இதில் “லோகபசாதா” என்பது தேவனாம்ப்ய திஸ்ஸன் கட்டிய முதல் கூடம். ஒன்பது தளத்தோடு ஒவ்வொரு தளத்திலும், நவமணிகளும் வெள்ளி மணிகளும் பதித்த விதானங்களோடும் நூறு சாளரங்களோடும் கூடிய ஆயிரம் அறைகள் கொண்ட பெரும் கூடம் என்று மகாவம்சம் வர்ணிக்கும் கட்டுமானம் இது. இப்போது அவற்றின் அடித்தளக் கற்தூண்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. மரக்கட்டுமானம் எப்போதோ அழிந்துபட்டன(5).

அடுத்து வந்த பனம்பமாலகா தேரோ மஹிந்தனின் நினைவிடம் என்று கருதுகின்றனர்.

அடுத்து அவ்விடத்தின் மிகமுக்கியமான கட்டுமானமும் இலங்கை பௌத்தர்களின் பேரபிமானத்துக்குப் பாத்திரமான தூபியுமான மஹாதூபி எனப்படுகிற ரத்னமாலி மகாதூபிக்குச் சென்றோம். போதி வளாகத்திலேயே தான் மகாதூபியும் இருக்கிறது.

ரத்னமாலி மகாதூபி/ருவன்வலி மகா ஸெய:
ஆதித் தூபி சிங்கள மகாவீரன் துட்டகாமினி (பொ.மு161) கட்டியது. பின் தேவனாம்ப்ய திஸ்ஸன் காலத்தில் (பொ.மு 250) மகா தேரோ மகிந்தர் வந்து சிறப்பித்தது. சிறப்பு வாய்ந்த வரலாற்றைத் தன்னோடு புதைத்துக் கொண்டிருந்த தூபியின் நடைத்தளமெங்கும் பழைய தூண்களின் எச்சங்களும், கல்வெட்டுகளும், சிற்பங்களும், புடைப்புருக்களும் சிதறிக் கிடக்கின்றன.


நடக்கையில் நம் காலடியில் திடீரென்று புலப்படும் கல்வெட்டுகளையும் சிலாரூபங்களையும் கண்டு வியந்தபடி சுற்றிவந்தோம். அருகிலேயே சுவையான இலவச மதிய உணவு வழங்கப்பட்டது. உணவு முடித்த கையோடு அபயகிரி மற்றும் விஜயபாகு ராஜாவின் மாளிகை என்று சொல்லப்படுகிற அனுராதபுரக் கோட்டை இருக்கும் தொல்லியல் வளாகத்தை வாகனப்பார்வையாக ஒரு சுற்று சுற்றியபின் மாத்தளை நோக்கிய பயணத்தைத் துவங்கினோம்.

மாத்தளை & ரத்னபுரி:
சில மணி நேரப் பயணத்துக்குப்பிறகு மாத்தளை வந்தடைந்தோம். திடீரென்று மருத நிலத்திலிருந்து குறிஞ்சி நிலத்துக்குக் குடிபெயர்ந்தது போலத் தோன்றியது. தென்கிழக்காசியா போலவே இங்கேயும் குன்றுகள் தோறும் பெரும் புத்த ரூபங்களைச்செய்து வைத்து மகிழ்கின்றனர் மக்கள்.

மிகவும் ரம்மியமான சூழலில் மலையகத்தின் மாத்தளை அமைந்திருக்கிறது. அங்கே சிறப்பு வாய்ந்த முத்து மாரியம்மன் கோயிலுக்கு முதலில் சென்றோம். மலையகத்து மக்களின் வாழ்வில் இன்றியமையாத இடத்தைப் பெற்றிருக்கிறது இந்த ஆலயம். ஏறக்குறைய 200 ஆண்டு பழமையானது. எண்பதுகளின் இனக்கலவரம் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கவில்லை என்று சொன்னார்கள். நல்லதொரு தரிசனத்தை முடித்த கையோடு அங்கிருந்து மலையேறி சந்தகட்டி முருகன் கோயிலை அடைந்தோம். 360பாகையும் மஞ்சுசூழ் மலைகள் சூழ குன்றின் உச்சியில் அழகுற அமைந்திருக்கிறது கோயில். அங்கிருந்த ஆஞ்சநேயர் மலை என்று ஒன்றைக் காட்டினார்கள்.

அங்கே ஆலய நிர்வாகிகளிடம் தமிழ் மரபு அறக்கட்டளை சந்தகட்டி ஆலயம் தொடர்பாகவும் மலையகத்து மக்களின் வாழ்வியல் கலாச்சார விழுமியங்கள் தொடர்பாகவும் காணொளி ஆவணம் எடுக்கப்பட்டது. கோயில் பிரசாதமே இரவு உணவாக அங்கிருந்து ரத்னபுரிக்குப் பயணப்படலானோம்.

சான்றுகள்:
1, 2, 3, 4 & 5. Anuradha Seneviratna, 1994.

You may also like

Leave a Comment