Home article இலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 3

இலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 3

by Administrator
0 comment

– நாள் 3 –

காலையில் முதல் வேலையாக நல்லூர் முருகன் கோயிலுக்குச்செல்வதாக ஏற்பாடு. வழியில் சங்கிலியான் அமைச்சர் வீடு என்று பழமையான கட்டிடம் கண்ணில் படவே உள்ளே சென்றோம்.

மந்திரிமனை:
சங்கிலியன் என்னும் 15ஆம் நூற்றாண்டுத் தமிழ் மன்னன் இலங்கை வரலாற்றில் முக்கிய இடம் வகிப்பவன். நல்லூரில் ஆட்சி செய்த இவன் போர்த்துக்கீசியருக்கு எதிராகப் பலமாகக் குரல் கொடுத்தவன். இவனது மந்திரியின் அரண்மனை தான் மந்திரிமனை என்ற பெயரோடு இப்போதும் நிற்கிறது. திராவிடக்கட்டுமானத்தில் இரண்டு தளங்களுடன் அழகுற இருந்த மாளிகை டச்சுக்காரர்கள் தம் காலத்தில் புனரமைத்துக் கொண்டதால் இப்போது இருவிதமான கட்டுமான அழகையும் தாங்கி நிற்கிறது.


இதன் தற்போதைய உரிமையாளர் இதைச்சேர்ந்த காணியை வர்த்தக இடமாகப் பயன்படுத்துவதாகத் தெரியவந்தது. அங்கிருந்து நல்லூர் முருகனைக் காணச் சென்றோம்.

நல்லூர் கந்தசாமிக்கோயில்:
பொன்வண்ணப்பூச்சில் அருமையான திராவிடக்கட்டுமானமாக கம்பீரமான தோற்றப்பொலிவோடு நின்றது நல்லூர் கந்தசாமிக்கோயில்.

மூலக்கோயிலின் காலம் 10ஆம் நூற்றாண்டு என்பர். மதுரையைப் போல கோயிலை நடுவே வைத்து நாற்புறமும் வீதிகளும் சுற்றங்களும் கோட்டை மதிலுமாய் நான்கு புற வாயில்களோடு ஒரு காலத்திலிருந்த நல்லூர் நகரம், அன்றைக்குச் சிறப்புப்பெற்ற யாழ் அரசின் தலைநகராக இருந்திருக்கிறது.

பதினேழாம் நூற்றாண்டில் போர்த்துக்கிசீயர்கள் வரும் வரை நல்லூர் ராஜதானியின் தலைமையாக இருந்து செயல்பட்டிருக்கிறது.

சிறப்பு மிக்க அந்தக்கோயிலை அழித்து சர்ச்சுகள் மற்றும் இன்ன பிற கட்டுமானங்களையும் ஏற்படுத்திக் கொண்டனர் போர்த்துக்கீசியர்கள். தற்போதுள்ள ஆலயம் பிற்காலத்தில் எழுப்பப்பட்டு 1890களில் ஆறுமுக நாவலரின் திருப்பணியால் புனரமைக்கப்பட்டு நிற்கிறது.

தரிசனம் முடித்து தமிழ் மரபு அறக்கட்டளையின் இலங்கைக் கிளை ஏற்பாடு செய்திருந்த கொக்குவில் இந்துக்கல்லூரியில் ஒரு சிறிய நிகழ்வில் பங்கேற்றோம். அங்கிருந்து நாகவிகாரைக்குச் சென்றோம்.

நாக விகாரை:
புதுப்பொலிவோடு காட்சி தரும் ஒரு பண்டைய பவுத்த வழிபாட்டிடம் இந்த விகாரை.

இதன் மூலக்கட்டுமானத்தின் காலம் பொ.மு. 3 என நம்பப்படுகிறது. பவுத்தம் பரப்ப மகா போதிக்கிளையோடு வந்த தேரி சங்கமித்ரை மற்றும் தேரோ மகிந்தன் இங்கே தங்கியதாகவும் அப்போது யாழ் நிலத்தை ஆண்ட நாக அரசன் வேண்டுகோளுக்கிணங்க போதியின் கிளையை இங்கே ஒரு வாரக் காலம் வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் அது தேவனாம்ப்ய திஸ்ஸனின் ஏற்பாட்டில் அனுராதபுரம் செல்கிறது. இந்தச்சிறப்பைப் பெற்றதால் இத்தளம் மக்களின் அன்புக்குரிய பவுத்த புனிதத்தலமாகிறது.

கோயிலின் உள்ளே அமைதியும் சாந்தியும் தழும்பும் புத்த உருவங்கள் ஆங்காங்கே நம்மைப்பார்த்துச் சிரிக்கின்றன. ஆலயத்தின் சுவரெங்கும் அழகிய வண்ணங்களில் பவுத்தக் கதைகளின் ஓவியங்கள். முழுமையான அமைதியில் பத்து நிமிடங்களைக் கரைத்தபின் நிர்மலமான மனதோடு வெளியேறினோம். மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக நாக விகாரைக்குள் பரிவார மூர்த்திகளாகக் கணபதி, அம்மன், விஷ்ணு, கந்தன் போன்ற இந்து தெய்வ உருவங்கள் வைக்கப்பட்டு உள்ளன. அண்மையில் சிவலிங்கம் ஒன்றும் இதில் சேர்ந்துள்ளது பாராட்டுக்குரியதாகத் தோன்றியது.

இதையே இந்துக்கோயில்களிலும் சர்ச்சுகளிலும் பின்பற்றினால் நலமாக இருக்கும் என்று எண்ணியபடி அங்கிருந்து கிளம்பினோம்.

யாழ் நூலகம்:
சோலைப் பின்னணியில் பிரம்மாண்டமாக நின்றது நூலகம். வாயிலிலேயே வீணையோடு சரஸ்வதி சிற்பம் சிரித்து வரவேற்றது.

1934இல் செல்லப்பா என்ற தனி மனிதரால் துவக்கப்பட்ட வாசிப்பு அறை மெல்ல மக்கள் மனதில் குடியேறி நூலகமானது. யாழ் மக்களோடு, வணிகர்களும், மெட்ராஸ் பைபிள் சங்கம், கொழும்பு இஸ்லாமியர் சங்கம், யாழ் வணிகர்கள் சங்கம் போன்றவை பெரிய அளவில் பங்களித்தனர். 1959இல் பெரிய நூலகமாக இது துவக்கிவைக்கப்பட்டது. அன்றைய காலத்தின் தெற்காசியாவின் மிக அதிகமான புத்தகங்கள் கொண்ட நூலகமாகச் சிறப்புப்பெற்றது யாழ் நூலகம்.

1981இல் ஒரு மோசமான இரவில் ஐக்கிய இந்து முன்னணிக் கட்சியின் பேரணியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுக்கு எதிர்ப்பாக இரவோடு இரவாக அன்றைய இலங்கை அரசு வன்முறையைக் கட்டவிழ்த்தது. பல லட்சம் தமிழர்களின் கடைகளும் வீடுகளும் தமிழ்த் தலைவர்களின் சிலைகளும் தமிழ்ப்பத்திரிக்கை அலுவலகமும் என்று பன்முகத்தாக்குதலில் யாழ் நகரமே தீக்கிரையானது. யாழ் நூலகம் எரியூட்டப்பட்டது. சுமார் ஒரு இலட்சம் புத்தகங்களும் அரிய சுவடிகளும் தீக்கிரையாயின. தமிழர் தம் அறிவுலகமே இருண்டது போலத் துயருற்றனர். ஒரு இனத்தின் மீது செலுத்தப்படும் மிக மோசமான வன்முறை அவ்வினத்தின் அறிவுக்கருவூலத்தின் மீது நடத்தப்படும் வன்முறை தான். அந்த வகையில் மீளாத்துயரில் ஆழ்ந்த யாழ் மக்கள் விரைவிலேயே மீண்டனர். ஒரு வருடத்துக்குள் நூலகத்தைச் சரிசெய்து புத்தகங்களைச் சேர்க்கத்துவங்கினர், ஆனால் 1983இல் நடைபெற்ற இனக்கலவரத்தில் குண்டுமழையில் சிக்கிப் பொத்தல்களோடு கூடாகி நின்றது நூலகம், மீண்டும் 1985லும் வன்முறையைச் சந்தித்தது. இருபது ஆண்டுகள் கழித்து 2003இல் நூலகம் திறக்கப்பட்டிருக்கிறது.

தன் கருப்பு வரலாற்றையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டுப் பொலிவோடு இளையோரை வாசிக்க இழுத்துக்கொண்டு சுறுசுறுப்பாய் செயல்பட்டு வருகின்ற நூலகத்திலிருந்து வெளியேற மனதே இல்லை.

இங்கே அண்மையில் இந்திய அரசு சார்பில் ஐம்பதினாயிரம் புத்தகங்கள் அனுப்பப்பட்டு நூலகத்தின் ஒரு பகுதி இந்தியப்பகுதியாகவே ஒதுக்கப்பட்டுள்ளது. மறைந்த திருமிகு அப்துல் கலாம் ஐயா அவர்களின் திரு உருவத்தைச்சுற்றிலும் புத்தகங்கள் சுவர்களாய் எழும்பி நிற்பதைக் காண்கையில் மனம் நிரம்பி வழிந்தது.

அதன் பிறகு சுண்ணாகம் நூலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு நிகழ்வில் கலந்து கொண்டு மாலை தேய்ந்து இருள் ஏறிய வேளையில் தான் எங்களால் கந்தரோடை செல்ல முடிந்தது.

கந்தரோடை:
மின்சாரக்கம்பி வேலிக்குப்பின்னே அழகிய பெரும் அரைக்கோளக்குன்றுகள் இருளில் யானைக்குட்டிகள் உறங்கிக் கொண்டிருப்பது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தியது. மிக நேர்த்தியான கட்டுமானத்தில் கந்தரோடை தென்பட்டது. பலவகையிலும் இது இந்தோனேசியாவின் ஜோக்ஜகர்தாவை எனக்கு நினைவூட்டியது.

கந்தரோடை இலங்கை தொல்லியல் களத்தில் சிறப்பான இடத்தைப் பிடிக்கும் தளங்களுள் ஒன்று. யாழ் மாவட்டத்தின் பழமையான தொல்லியல் தளம் என்ற சிறப்பையும் பெறுகிறது. இந்த நிலப்பகுதி ஒரு காலத்தில் கதிரமலை என்ற பெயரால் அழைக்கப்பட்டிருக்கிறது. யாழ்நிலத்தில் தலைநகராகச் செயல்பட்ட சிறப்பு வாய்ந்த வணிகப் பெருநகரமொன்று இங்கே இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்றும் இது பன்னெடுங்காலமாகத் தொடர்ந்த மக்கள் பயன்பாட்டிலிருந்த நிலம் என்றும் இங்கே அகழாய்வில் கிடைத்த அரிய சான்றுகள் கொண்டு தொல்லியல் அறிஞர்கள் நிறுவ முயல்கின்றனர்.


அவ்வகையில் மூவாயிரத்தில் இருந்து குறைந்தது இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றைச்சொல்லும் இடமாகிறது (1). இங்கே கிடைக்கப்பெற்ற அகழாய்வுப் பொருட்களில் தமிழ் பிராமி பொறித்த பானை ஓடும் கிடைத்ததாகச் சொல்லப்படுகிறது. பலதரப்பட்ட பொறிப்புகள் கொண்ட பானை ஓடுகள், நாகம் பொறித்த நாணயங்கள், கருங்கல் அம்மி, லட்சுமி உருவம் ஆகியவை பௌத்த காலத்துக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தவை.


எனினும் சிங்கள இன எழுச்சியின் காரணமாக இங்கே தமிழ் வரலாற்றின் தரவுகளை மறுத்து அந்த கால எல்லைக்குப்பிறகு சுண்ணாகத்தில் கிடைத்த காந்தார மரபைச்சேர்ந்த புத்தர் உருவம் போன்ற பௌத்தத் தரவுகளை மட்டும் பிரபலமாக்கி, கந்தரோடை கதுரகொட என்ற பெயர் கொண்டு பவுத்த மரபுச் சின்னமாக இன்று பராமரிக்கப்பட்டு வருகிறது.

அங்கே வைக்கப்பட்டிருக்கும் முழுக்க சிங்களத்திலான அறிவிப்புப் பலகையில், இது அனுராதபுரக்காலத்திற்கும் முன்பு புத்தர் இலங்கை வந்து சுளோதரனுக்கும் மகோதரனுக்கும் இடையிலான சண்டையைத் தீர்த்தபின் ஓய்வெடுத்த இடம் என்றும் பொலனருவை காலத்தில் சிறப்பான பௌத்த விகாரையாக இருந்த இவ்விடத்தைத் திராவிட எதிரி மன்னன் சங்கிலி சிதைத்து நாசப்படுத்தினான் என்று எழுதியிருக்கிறதாம் (2).

இங்கேயும் பலகாலமாகத் தமிழ் வரலாறு புதைக்கப்பட்டுப் புறக்கணிக்கப்பட்ட நிலையிலேயே இருக்கிறது என்று தெரிந்தது. வரும் காலங்களில் மாற்றம் நிகழும் என்று மக்கள் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையோடே சிங்கள இராணுவ வீரர்கள் பாதுகாப்பில் நின்ற புத்தரை வணங்கி மீண்டோம். அருகே விட்டுவிடக்கூடாதென அனைவரும் சொன்ன நிலாவரைக் கிணற்றைக் காண வேகமாகச்சென்றோம்.

நிலாவரைக்கிணறு:
இருள் ஏறிவிட்டபடியால் கதவுகளடைத்துவிட்டுக் காவலர் உள்ளே உறங்கினார் போலும். நாங்கள் பல நாடுகளிலிருந்து வந்திருக்கிறோம் என்று மன்றாடியதும் சிரித்தபடி வந்து கதவு திறந்துவிட்டார்.

உள்ளே முழுமையான சுற்றுச்சுவர்களோடு கூடிய பெரியதொரு குளத்தைக்காட்டி இது தான் நிலாவரைக்கிணறு என்றார்கள். சிவன் கோயில் தெப்பக்குளம் போன்ற அமைப்பிலிருந்த அது இரண்டு பனை ஆழமாம். சில ஆண்டுகள் முன்பு இலங்கைக் கடற்படையின் நீர்மூழ்கி ரோபோக்கள் எடுத்த புகைப்படங்களில், உள்ளே எந்தக்காலத்தோ மூழ்கிய மாட்டுவண்டி ஒன்று டைட்டானிக் போலத் தண்ணீருக்குள் தனியாகக் கிடப்பது தெரிந்தது. இது நிலத்தடி நீரோடு நேரடியாக இணைப்பில் இருப்பதால் எந்தக்காலத்திலும் வற்றுவதில்லை அதே போல இங்கிருந்து பல சுரங்கங்கள் வழியாக நீரோட்டங்கள் பாய்வதாயும் தெரிகிறது, இந்த நிலவியல் அற்புதத்திற்கு இராமாயணத்தை இணைத்த கர்ண பரம்பரைக் கதை ஒன்றும் உண்டு. இராமர் இலங்கை நோக்கிப் படையெடுத்து வந்த நிலையில் தன் வானரப்படையின் தாகம் தீர்க்கவே அம்பெய்து நிலத்தைப் பெயர்த்த குளம் இது என்பது தான் அந்தக்கதை. இலங்கையில் சராசரி மானுட புரிதலுக்கு எட்டாத அற்புதங்களுக்கு இராமனோ இராவணனோ புத்தனோ விளக்கம் தருவது அன்றைய மக்களின் நம்பிக்கை சார்ந்த புரிதலை நமக்குக் காட்டுகிறது. அருகே மிகப்பழமையான சிவன் கோயில் ஒன்றும் உள்ளது, அது தட்சண கைலாய புராணத்தில் ’நவசைலேஸ்வரம்’ என்று குறிப்பிடப்பட்டிருப்பதாயும் சொல்கிறார்கள்(3).

இரவு உணவை எடுத்துக்கொண்ட பின் வவுனியா நோக்கிப் பயணப்பட்டோம். நடுவழியிலேயே முறுகண்டி பிள்ளையாரையும் விடவில்லை நாங்கள். யாழ்ப்பாணம்-கண்டி புறவழிச்சாலையில் இடைப்பட்ட பயணத்தை நல்லபடியாக்க அவர் அருளுவார் என்று நள்ளிரவில் கூட நிறுத்தி தேங்காய் உடைக்கத் தவறுவதில்லை ஓட்டுநர்கள். அதனால் பயண இலக்கணம் பிசகாமல் அவருக்கும் ஒரு வணக்கத்தை வைத்துவிட்டு பின்னிரவு வேளையில் தான் வவுனியா வந்தடைந்தோம். சிறீநகரில் தோழர் வீட்டில் அந்த நேரத்திலும் எங்களுக்காக விழிப்போடு காத்திருந்தார்கள். விடியலுக்கு இருந்த சொச்ச நேரத்தையும் பயனாக்க உறங்கிக் கழித்தோம்.

மறுநாள் வரலாற்றுச்சிறப்பு மிக்க அனுராதபுரம் நோக்கிய பயணம் எங்களுக்காகக் காத்திருந்தது.

சான்றுகள்:
1. Indrapala, 2006.
2. Samanth Subramanian,2015
3. Mirror, 2016

You may also like

Leave a Comment