Home article இலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 1

இலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 1

by Administrator
0 comment

மலர்விழி பாஸ்கரன்
(எழுத்தாளர் மாயா)

– நாள் 1 –

இலங்கைக்கு எனது முதல் பயணம் என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகம் இருந்தன. அவற்றைச் சுருட்டி ஓரமாக வைத்துவிட்டு விமான நிலையத்தில் எங்களுக்காகக் காத்திருந்த தம்பியின் வாகனத்தில் ஏறி வவுனியா நோக்கி நடுநிசிப்பயணம் மேற்கொண்டோம்.

தொண்ணூறுகளின் தமிழ்த்திரை இசையை ஓடவிட்டுக்கொண்டிருந்த ஓட்டுநரின் ரசனையை ரசித்தபடி வழி நெடுகிலும் இருளில் நிறம் மாறும் வண்ணவிளக்குகளின் மத்தியில் அமர்ந்து மந்தகாசமாகச் சிரித்துக் கொண்டிருந்த புத்தர்களைக் கடந்து போனோம். தமிழகத்தில் சந்திக்கு ஒரு பிள்ளையார் உட்கார்ந்திருப்பது போல இலங்கையில் புத்தர் உட்கார்ந்திருக்கிறார்.

ஐந்து மணி சுமாருக்கு வவுனியாவின் சிறீநகர் (ஸ்ரீ நகர்) குடியிருப்புப்பகுதியில் இருந்த ஒரு நண்பர் இல்லத்தைச் சென்றடைந்தோம். விருந்தோம்பல் முகமாய் வாசலிலேயே காத்திருந்த தம்பதியர் வயதுக்கு பத்து இளமையாகத் தெரிந்தனர் என் கண்களுக்கு. அதற்குக் காரணம் அவர்கள் உணவும் நீரும் நல்மனதும் என்று பின்னர் புரிந்தது. அந்த அதிகாலையில் எங்களைச் சிறிது கண்ணயரச்சொல்லிவிட்டுப் பிட்டு அவித்துக் கொண்டிருந்தார் வீட்டுக்கார அம்மா. கட்டாந்தரையும் மின்விசிறிகள் அற்ற உறக்கமும் கண்டு பல ஆண்டுகள் ஆகியிருந்த போதும் இயல்பாகப் பொருந்திக்கொண்டது எங்களுக்கு. கிணற்றடியில் நீர் சேந்தி உடற்சூடு பறக்கக் குளித்தபின் சுடச்சுட பிட்டும் சம்பலும் ஆப்பமும் சாம்பாரும் பரிமாறினார்கள். கூடவே தேநீரும். அதற்கும் செல்ல(நாய்)க் குட்டி லைக்கா எங்களோடு பரிச்சயமாகி இருந்தாள்.

அவர்களது குசினியில் இன்னும் புழக்கத்தில் இருக்கும் புகட்டும் விறகடுப்பும் பாத்திரங்களும் நமது எழுபதுகளின் சமையலறையை நினைவூட்டின. பொதுவான பேச்சிலும் இழையோடிய அவர்களது வருத்தத்தை மறைத்தே எங்களிடம் கலகலப்பாக இருந்தனர். கிளம்புகிற தறுவாயில் அவர் பள்ளி வருகையேட்டில் ஒட்டிச்சேகரித்து வைத்திருந்த போர்க்காலத்துச் செய்தித் துணுக்குகளையும் அதன் எதிர்வினையாய் அவருள் எழுந்த கவிதைகளையும் காட்டினார். குருதியில் நனைந்த கண்ணீரின் வாசனையை அதில் இப்போதும் நுகர முடிந்தது. நெடுந்துயரை மறக்க முயன்றபடி சிரித்துக்கையாட்டி விடைபெற்றோம். எங்களது இலக்கு மன்னார் மாவட்டம் – கட்டுக்கரை.

கட்டுக்கரை:
வட இலங்கை, மன்னார் மாவட்டத்துக்கு உட்பட்ட மாதோட்டத்தில் அமைந்துள்ளது கட்டுக்கரை குளம். இதன் அளவைக்கண்டு இராட்சத குளம், மானமடுவாவி என்று இதனை மக்கள் அழைத்தனர் போலும். இங்கே குருவில் வான் பகுதியில் யாழ் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் அவர்கள் தலைமையில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

பன்னெடுங்காலம் முன்பு இங்கு மக்கள் குடியிருப்பு இருந்ததற்கான அடையாளங்களை (குறிப்பாக இரண்டு காலகட்டத்தைச் சேர்ந்த) ஏராளமான தொல்லியல் எச்சங்கள் வழி இந்தக்குழு கண்டுபிடித்து வகைப்படுத்தி இருக்கிறது. 1400 ஆண்டுகள் பழமையான குடியிருப்பு இருந்தமைக்குச் சான்றுகளாக – மட்பாண்டங்கள், நாணயங்கள், ஆயுதக்கருவிகள், சிலைகள், கைவளையல் துண்டுகள், யானையின் கால்கள், மாட்டுக்கொம்புகள், நீர்த்தாங்கிகள், நாக உருவச்சிலைகள், கறுப்பு சிவப்பு நிற மட்பாண்டங்கள், 75ற்கும் மேற்பட்ட யானைத்தந்தங்கள், குதிரை நந்தா அகல்விளக்குகள், குறியீடுகள், கலசங்கள், சிறுகுடம் போன்றவையும் பெருங்கற்காலப் பண்பாட்டுக்காலத்திய சான்றுகளாக – கல்மணிகள், கல்லினால் வடிவமைக்கப்பட்ட காப்புகள், சங்கு வளையல்கள் , மட்பாண்டங்கள் என்பனவும் இங்கிருந்து கிடைத்துள்ளன. இப்பொருள்களுடன் இவற்றை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்பட்ட கற்கள், கண்ணாடிகள், சங்குகள், மட்பாண்ட அச்சுகள், இரும்புருக்கு உலைகள் போன்றவையும் கண்டுபிடிக்கப் பட்டிருக்கின்றனவாம் (1).

கட்டி(டு) இறக்கும் துறை என்கிற பொருளைத்தரும் கட்டுக்கரை என்ற தமிழ்ப்பெயர் கடற்கரை ஒட்டிய நீர்ப்பரப்பை மையமாகக் கொண்ட குடியிருப்புப் பகுதியாக இது இருந்திருக்கக் கூடுமென்ற எண்ணத்தை நமக்குத் தோற்றுவிக்கிறது. கட்டுக்கரைக்கு வடக்கே பூநகரி பிரதேசத்தில் நாகபடு வான் என்ற குளப்பகுதியிலும் இதே போல் மூன்றடுக்கு மண்ணாய்வில் குடியிருப்புப் பகுதிக்கான சான்றுகள் கிடைத்திருக்கின்றன. கட்டுக்கரை அகழாய்வில் தமிழி எழுத்துப்பொறித்த நூற்றுக்கும் மேற்பட்ட மட்கலன்கள் கிடைத்திருப்பதாயும் அதிலே ஒன்றில் மட்டுமே முழுமையான சொல்லான ’வேலன்’ என்ற பொறிப்பு கிடைத்ததாகவும் சொல்லப்படுகிறது. இவ்வகையில் கீழடியைப்போல நீர்ப்பரப்பை ஒட்டிய நெடுங்காலப் புழக்கத்திலிருந்த வளமான குடியிருப்புப் பகுதியாக இது இருந்திருக்கிறதென்பது நமக்குப் புலனாகிறது.


வட இலங்கையில் மாதோட்டம், பூநகரி, மாங்குளம் போன்ற இடங்களில் பழைய கற்காலப் பண்பாட்டிற்குரிய கல்லாயுதங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன என்றும் இப்பண்பாட்டிற்குரிய மக்களும், தமிழகத்தின் தேரிநிலப்பகுதியில் வாழ்ந்த மக்களும் மானிடவியல், மொழியியல், தொல்லியல் மற்றும் பண்பாட்டு அடிப்படையில் ஒரே இன மக்கள் என்ற கருத்தும் அறிஞர் பெருமக்கள் மத்தியில் நிலவுகிறது (2). இப்பண்பாட்டை அடுத்து கி.மு. 800-க்குப் பின்பாக தென்னிந்தியத் திராவிட மக்களது குடியேற்றம் நடந்ததற்கான சான்றுகள் வடஇலங்கை உட்பட நாட்டின் பல பகுதிகளில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாகத் தெரிகிறது (3).

இங்கே கிடைக்கும் பிற நாட்டு மட்கலன்கள், காசுகள் போன்ற தொல்லியல் சான்றுகள் 2,000 ஆண்டுகளாகவே மக்கள் இங்கே வளமாக வாழ்ந்திருப்பதையும் அவர்கள் கடல் வாணிபத்தில் திறம் பெற்றிருந்தனர் என்பதையும் குறிக்கிறது. இந்தப் பகுதியிலே கண்டுபிடிக்கப்பட்ட கி.மு. 1ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய நாக அரசர்களின் பிராமி கல்வெட்டுகளையும் இங்கே நினைவு கூரவேண்டி இருக்கிறது. ஆக இது கற்காலப் பயன்பாடு துவங்கி இனக்குழுக் காலந்தாண்டி அரசு மரபுகளைச் சொல்லும் காலம் வரை நீடித்த பயன்பாட்டிலிருந்த நிலமாக இருக்கிறது.

ஒரு வகையில் கீழடி வாழ்வியலின் நீட்சியாகவே கட்டுக்கரைப் பகுதியும் என் கண்களுக்குத் தெரிந்தது. எனினும் கீழடிக்கும் கட்டுக்கரை அகழாய்வுக்கும் நான் காணும் ஆகப்பெரிய வேறுபாடு இங்கே கிடைத்திருக்கும் சமயச்சின்னங்கள்.


2,600ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் பேசி எழுதிய மதுரை மண்ணில் இல்லாத சமயம் 1,400 ஆண்டுகளுக்கு முந்தைய, தமிழ் இலக்கியங்களும் வரலாறும் தொடர்ச்சியாகப் பேசும் நாகநாடு என்கிற வட இலங்கை மண்ணில் வந்து சேர்ந்திருக்கிறது.

வியப்பூட்டும் ஐயனார் வழிபாடு, நாகர் சிலைகள், வேல், மயில், லிங்கம், நந்தி போன்றவை சிறுதெய்வ வழிபாட்டுச்சமுதாயத்திலிருந்து பெருந்தெய்வ வழிபாடு நோக்கி மாற்றம் பெறத்துவங்கிய நிலையில் இந்தச் சமுதாயம் இருந்திருக்கலாம் என்று சுட்டுகிறது.

கட்டுக்கரைச் சான்றுகள், இன்றளவும் தமிழர்களை இலங்கையின் வந்தேறிகளாகப் பார்க்கும் பார்வையை மாற்றும் ஆற்றல் பெற்றவையாகத் தெரிகின்றன. இன்றைய சூழலில் இலங்கையில் நடத்தப்படும் மேலதிக அகழாய்வுகள் தொல்தமிழ் நாகரீகத்தின் கடல் கடந்த புதிய பரிமாணத்தை இலங்கையில் நிலைநிறுத்தக்கூடும் என்றால் மிகையில்லை.

அந்த புராதன நிலத்தில் கால் பதித்துவிட்ட குதூகலத்தோடு மீண்டும் பயணப்பட்டோம், வடமேற்கே மன்னார் நோக்கி. வழியெங்கும் இருபுறமும் போர்க்காலத்தின் சுவடுகளைச் சொல்லியபடி இருக்க நாங்கள் முடிந்தவரை மனதைக்குவித்து அடுத்த இலக்கில் பதித்திருந்தோம்.

திருக்கேத்தீச்சரம்:
கடற்கரை வெண்மணல் பரப்பில் சில மைல் தூரம் பயணம். பெருமளவு எனக்கு இராமேஸ்வர மண்ணில் இருப்பது போன்ற தோற்ற மயக்கத்தை உண்டாக்கியது. நாங்கள் சென்றது நண்பகல் வேளையாதலால் வெயில் காய்ந்தது. மன்னார் தீவுக்குள் நுழையுமுன் தலைநிலத்தின் கரையிலே அமைந்திருக்கிறது ஆலயம். சோழ பாண்டிய மன்னர்கள் திருப்பணி செய்த, சைவப்பெரியவர்களால் பாடல் பெற்ற சிவத்தலங்களுள் ஒன்று இந்தத் திருக்கேத்தீஸ்வரம்.

இங்கே இறைவனுக்கு நாகநாதர் என்ற பெயரும் உண்டு. இது ஆதிக்குடியினரான நாகர்கள் வழிபாட்டுத்தளமாய் இருந்திருக்கலாம், பிற்காலத்தில் கேது வழிபட்ட கோயில் என்ற புராணம் எழுந்திருக்கலாம் என்று எண்ணத்தோன்றுகிறது. காரணம் இப்பகுதியின் தொடர்ச்சியான பயன்பாடு.

Periplus of Erithryean Sea சொல்லும் மாந்தை என்ற இலங்கையின் புகழ்பெற்ற துறைப்பட்டினம் இந்த மாந்தோட்டம் பகுதி என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். வையை நதிமுகத்துவாரத்தில் அழகன்குளம் இருந்தது போல பண்டைய அரச பீடமான அனுராதபுரத்தை இணைக்கும் அருவி ஆற்றின் முகத்துவாரத்தில் மாந்தை இருந்ததாகத் தெரிகிறது(4).

கிரேக்க ரோமானிய வணிகத் தொடர்பு வட இலங்கையில் வலுவாக இருந்த காலத்தில் சிறப்பான துறைகளுள் ஒன்றாக இது இருந்திருக்கிறது. பின்னரும் பாண்டியர் பல்லவர் சோழர் என்று தொடர்ச்சியாகத் தமிழகத்து அரசுகளோடும் மக்களோடும் இணைப்பிலிருந்த நிலப்பகுதியாகிறது. 16ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்கள் இலங்கை முழுவதுமுள்ள பவுத்த சைவ சமயக் கட்டுமானங்களை அழித்து, கோட்டை கட்டிக்கொண்ட பொழுது இக்கோவிலின் பெரும்பகுதி அழிவுற்றதாக நம்பப்படுகிறது.

1894இல் பழைய கோயிலிருந்த பகுதியில் சோழர்காலச் சிவலிங்கமும் இன்னும் பல சிற்பங்களும் கண்டெடுக்கப் பட்டன. அதன்பிறகு 400 ஆண்டுகள் கழித்து ஆறுமுக நாவலர் துவக்கிய ஆலயப்பணி இன்று வரை சீரிய முறையில் நடைபெற்று இப்போது அழகான கோயிலை உருவாக்கி இருக்கிறது. தற்போது இங்கே மீண்டும் திருப்பணி நடப்பதால் திரு உருவங்கள் பாலாலயத்தில் வைக்கப்பட்டு அங்கே வழிபாடு நடந்து கொண்டிருக்கிறது போலும்.

இராஜேந்திரச்சோழன் நிறுவியதாகச் சொல்லப்படும் பெரும் லிங்கவடிவம் கோயிலின் உட்புறத்தில் கூரைவேய்ந்து வைக்கப்பட்டிருந்தது.

தமிழகத்துச் சிற்பிகள் கோயில் பிரகாரத்துத் தூண்களுக்காகச் செய்வித்த அருமையான சிற்பங்களைக் கண்டு ரசித்தபடி நண்பர் ஒருவர் துணையோடு, போர்த்துகீசியர்கள் இடித்துத்தள்ளிய ஆதிக்கோயிலின் இடிபாடுகள் என்று சொல்லப்பட்ட இடத்துக்குச் சென்று பார்வையிட்டோம்.

பெரும் பள்ளங்களில் பழைய செங்கல் மற்றும் தூண் வடிவங்கள் ஆங்காங்கு வெளிப்பட்டாலும் முற்றிலும் மீட்கத்தக்கச் சான்றுகள் அந்த இடிபாடுகளுள் இனி கிடைப்பது அரிது என்றே எங்களுக்குத் தோன்றியது. அதன் பிறகு பாலாவித் தீர்த்தத்தைப் பார்த்தபடி வடக்கே மன்னார் தீவு நோக்கிய பயணத்தைத் தொடர்ந்தோம்.

மன்னார் தீவு:
தமிழ் மரபு அறக்கட்டளையின் ஆர்வலர் ஒருவர் அளித்திருந்த பழமையான வரைபட மாதிரியை வைத்துக்கொண்டு இன்றைய மன்னார் எந்த அளவுக்கு அந்த வரைபடத்தோடு ஒப்பு கொள்ளத்தக்கதாய் இருக்கிறது என்ற சிறு ஆய்வு நடத்தினோம்.


எதிர்பார்த்தபடியே அன்றையிலிருந்து இன்றைக்கு மன்னார் பெருமளவு மாற்றம் பெற்றிருக்கிறது. வரைபடத்தில் காணக்கிடைக்கும் பல கிருத்துவ ஆலயங்களைக் கண்டடைய முடியவில்லை எனினும் அவை விட்டுச்சென்ற எச்சங்கள் விதைகளாய் மாறி இன்று விருட்சங்களாய் நிற்பதைக் காண முடிந்தது.

இன்றைய மக்களின் வாழ்வில் பிரித்தெடுக்க முடியாத அளவில் உட்புகுந்த சமய நெறிகளின் சாயல் பிணைந்து கிடக்கிறது. மன்னார் தீவிலிருந்து விடைபெற்றுக்கொண்டு பூநகரி வழியாக யாழ்ப்பாணம் செல்லலானோம்.

மண்ணித்தலை சிவாலயம்:
மன்னாரிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வடகிழக்கே பயணப்பட்டு பூநகரி வந்தடைந்தோம். இருள் சூழத் துவங்கிய பின்மாலைப் பொழுதில் பூநகரியின் கவுதாரிமுனையில் இருந்த பழமையான சிவாலயத்தை நோக்கிய பயணம் மறக்க இயலாதது.


அங்கே சில காலமாகத்தான் மின்சார வசதி வந்திருப்பதாகத் தெரிவித்தனர். சாலையும் மிகவும் பழுதடைந்து இருளில் மிகவும் சிரமப்பட்டு மண்ணித்தலை சிவாலயம் சென்றோம்.

வெண்மணல் குன்றுகள் ஆங்காங்கு எழுந்து நிற்க அத்தகைய மணற்குன்று ஒன்றிலிருந்து புதைந்த இந்தக்கோயில் ஒரு நாள் வெளிப்பட்டிருக்கிறது. கோறக்கற்களைக் கொண்டு அடிப்பாகமும் அதற்கு மேல் சுதை, சுண்ணாம்பு, செங்கட்டி கொண்டும் இக்கோயில் அமைக்கப்பட்டிருக்கிறது. ஐந்து அடி நீள அகலத்தில் கர்ப்பக்கிருகம் கொண்டுள்ளது.

மூன்று தளத்தில் அமைந்த இதன் விமானம் 13 அடி உயரம் கொண்டது. மூன்று நிலை விமானங்களோடு இதன் தேவகோட்டம், சாலை, கர்ணக்கூடு என்பன கி.பி. 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழக் கலை மரபிற்குரியதென்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்(5).


இந்த ஆலயம் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்ட யாழ்ப்பாணம் பல்கலைக்கழக தொல்லியல் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் அவர்கள், இது கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் இராசேந்திரச்சோழன் காலத்தில் அநுராதபுர அரசை வெற்றிகொண்டு இலங்கையில் ஆட்சி புரிவதற்கு முன்னரே, சோழர்தம் ஆதிக்கத்தில் அரச தலைநகரங்கள் சிலவும் வட இலங்கையில் இருந்துள்ளன என்பதை இப்பகுதியில் கிடைக்கின்ற சோழர்கால தொல்லியற் சான்றுகள் உறுதி செய்கின்றன என்கிறார். அதற்கு இந்த மண்ணித்தலை சிவன் ஆலயம் சிறந்த எடுத்துக்காட்டு என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.

அத்தோடு மணல் மேடுகள் நிறைந்த மண்ணித்தலை பிரதேசத்தில் கிடைக்கப் பெறாத முருகைக் கல்லையும், செங்கற்களையும் கொண்டு இந்தக்கோயில் கட்டப்பட்டதை நோக்கும் போது தொழினுட்பமும், மூலப்பொருட்களும் வெளியிலிருந்து கொண்டுவரப்பட்டுக் கட்டப்பட்டுள்ளது என்பது திரு. புஸ்பரட்ணம் அவர்களது கருத்தாகும்.

இதன் அருகிலேயே, தெற்கே கௌதாரிமுனையில் கைவிடப்பட்ட நிலையில் ஓர் ஆலயத்தின் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும் அது 70 அடி நீளத்திலும், 30 அடி அகலத்திலும் அமைந்த இவ்வாலயம் – கர்ப்பக்கிருகம், அந்தராளம், முன்மண்டபம், கொடிக்கம்பம், துணைக்கோவில் கொண்ட ஆலயம் என்ற தகவலும் நமக்குக்கிடைத்தது.

இது காலத்தால் மண்ணித்தலை சிவன் கோயிலை விடவும் பிற்பட்டதாக இருக்கலாம் என்று கருதுகின்றனர்.

இப்படித் தொடர்ந்து தமிழகம் நோக்கிய இலங்கைத் தலைநிலத்தின் கரையெங்கும் காணக்கிடைக்கும் வரலாற்று எச்சங்கள் இங்கே மேலும் சான்றுகளைத்தேட வேண்டிய அவசியத்தையும் கிடைத்தவற்றை முறையாகப் பாதுகாக்கும் பொருட்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகின்றது.

நள்ளிரவு தாண்டி யாழ் வந்தடைந்தோம். மீண்டும் ஒரு புதிய இலக்கு மறுநாள் காத்திருந்தது.

சான்றுகள்:
1. 2019, திருமதி சுயன் விஜயதர்சினி, நிமிர்வு இதழ், இலங்கை.
2. Ragupathy (1987), Pushparatnam (1993).
3. Strambalam (1990), Seneviratne (1984), Ragupathy (1987), Pushparatnam (2002).
4. O.Bopearachchi (2004).
5. வீரகேசரி (2018).

(தொடரும் …)

You may also like

Leave a Comment